Published : 12 Nov 2019 07:51 AM
Last Updated : 12 Nov 2019 07:51 AM
திருவனந்தபுரம்
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவுவதற்காக தனது தலைமுடியை வழங்கிய கேரள மாநில பெண் போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் அபர்ணா லவக்குமார். இவர் திருச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் மூத்த சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நெருக்கடியான வேலைகளுக்கு இடையேயும் இவர் பள்ளி மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு பள்ளிக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்புக்குள்ளான 5-ம் வகுப்பு மாணவனை அபர்ணா சந்தித்தார். அப்போது அந்தச் சிறுவன் புற்றுநோய்க்கான ‘கீமோதெரபி’ சிகிச்சையால் தலைமுடி முழுவதையும் இழந்திருப்பதைப் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து அபர்ணா, தனது நீண்ட தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வரும் தொண்டு நிறுவனத்துக்கு தானமாக வழங்கியுள்ளார். அந்தத் தொண்டு நிறுவனம் தானமாகப் பெறும் தலைமுடியைக் கொண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ‘விக்’ தயாரித்து வருகிறது.
கேரள காவல் துறையின் விதிமுறைப்படி ஆண், பெண் போலீஸார் இருவருமே மொட்டை அடித்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அபர்ணா விஷயத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் விதிமுறையை தளர்த்தி உள்ளனர். மொட்டை தலையுடனும், கத்தரித்த கூந்தலுடனும் அபர்ணா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகளை குவித்து வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை செலுத்தினால்தான் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. அந்த சமயத்தில் வழக்கு ஒன்றை விசாரிக்க மருத்துவமனைக்கு சென்றிருந்த அபர்ணா, தன்னுடைய 3 தங்க வளையல்களை கொடுத்து உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார். அப்போதே அபர்ணாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அபர்ணாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment