Published : 09 Nov 2019 06:32 PM
Last Updated : 09 Nov 2019 06:32 PM

அயோத்தி தீர்ப்பு புதிய அத்தியாயம்: புதிய இந்தியாவில் அச்சம், கசப்புணர்வு இல்லை: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை  

புதுடெல்லி

அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவில் அச்சம், கசப்புணர்வு, எதிர்மறையான சிந்தனை ஆகியவற்றுக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

நூற்றாண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் இன்று வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. நீதி, நியாயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நாட்டின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்த நாள் சிறந்த நாளாகும். மக்களாட்சி வலிமையாகத் தொடர்கிறது என்பதை இந்தியா உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்புக்குப் பின் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு மதத்தினரும் வரவேற்பது இந்தியாவின் பழமையான கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் என்பதை நிரூபித்துள்ளது.

இந்த தேசமே அயோத்தி வழக்கை நாள்தோறும் விசாரிக்க விரும்பியது. அதன்படி விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் உச்ச நீதிமன்றம் விசாரணையின்போது உச்சபட்ச பொறுமையுடன் கவனத்துடன் கேட்டது. அனைத்துத் தரப்பின் ஒப்புதலுடன் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் மகிழ்ச்சியானதாகும்.

புதிய இந்தியாவில் அச்சம், கசப்புணர்வு, எதிர்மறையான சிந்தனை ஆகியவற்றுக்கு இடமில்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு நமது அமைதி, ஒற்றுமை, நல்லுறவை வளர்த்தல் மிகவும் அத்தியாவசியம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புதிய உதயத்தைக் கொடுத்திருக்கிறது. புதிய தலைமுறையினர் புதிய இந்தியாவை எழுப்புவார்கள்.

நவம்பர் 9-ம் தேதி பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள், கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட நாள். இன்று அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி விடுக்கும் செய்தி என்னவென்றால், ஒற்றுமையாக, அனைவரும் இணைந்த கைகளோடு முன்னோக்கி நடைபோட வேண்டும் என்பதாகும். அனைத்து கசப்புணர்வுகளுக்கும் இன்று முடிவு நாள்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x