Published : 08 Nov 2019 09:44 AM
Last Updated : 08 Nov 2019 09:44 AM
என்.மகேஷ்குமார்
ஹைதராபாத்
தெலங்கானாவில் தாசில்தார் விஜயா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி கோட்டாட்சியருக்கு காவலர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் மேட் மண்டல தாசில்தாராக இருந்தவர் விஜயா ரெட்டி. இவரை, ரமேஷ் என்ற விவசாயி அவரது அலுவலகத்துக்குள் கடந்த 4-ம் தேதி நுழைந்து எரித்துக் கொன்றார்.
இதனைத் தொடர்ந்து, தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ரமேஷ் தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவர் காப்பாற்றப்பட்ட போலீஸில் சரணடைந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தெலங்கானா மட்டுமின்றி ஆந்திராவிலும் தாசில்தார்கள் மிகவும் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்ட கோட்டாட்சியராக பணியாற்றி வரும் ராஜேந்திர குமாருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்ம நபர், “எனது நிலம் தொடர்பான விவகாரத்தில் நீங்கள் நியாயமான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தாசில்தார் விஜயாரெட்டிக்கு நேர்ந்த கதியே உங்களுக்கும் ஏற்படும்” என மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து காமாரெட்டி எஸ்.பி.க்கு கோட்டாட்சியர் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் நடத்திய விசாரணையில், தாதையகுண்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் ஸ்ரீநிவாஸ் எனும் காவலரே கோட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்ரீநிவாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதியளித்துள்ளார்.
விவசாயி ரமேஷ் மரணம்
இதனிடையே, தாசில்தார் விஜயா ரெட்டியை எரித்து கொன்ற விவசாயி ரமேஷ் நேற்று உயிரிழந்தார். தானும் தற்கொலைக்கு முயன்றதால் பலத்த தீக்காயமடைந்த அவர், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...