Published : 06 Nov 2019 05:57 PM
Last Updated : 06 Nov 2019 05:57 PM
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் தொலைபேசி, இண்டெர்நெட் துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்த வழக்கில் குலாம் நபி ஆசாத்தை பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் கபில் சிபல் காஷ்மீர் நிலவரம் குறித்து முன்வைத்த வாதத்திற்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியபோது, ‘எமர்ஜென்சி காலக்கட்டத்தில் என்ன நடந்தது?’ என்று பதில் கேள்வி எழுப்பினார்.
“70 லட்சம் மக்கள் ஒரே சமயத்தில் இவ்வாறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இருந்ததில்லை என்று கபில் சிபல் வாதிட்டார்.
இதற்கு உச்ச நீதிமன்ற அமர்வின் நீதிபதி எஸ்.வி.ரமணா பதில் அளிக்கையில், “1970-களில் என்ன நடந்தது? அதான் எமர்ஜென்சி காலத்தில்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த கபில் சிபல், சட்டப்பிரிவு 352-ன் கீழ் கூட அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் சாத்தியங்களை முன் அறிவிக்கவில்லை. பின் எப்படி ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 மாதங்களாக அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன? அதாவது குற்ற நடைமுறைச் சட்டம் 144 பிரிவின் கீழ் மேஜிஸ்ட்ரேட் ஊரடங்கு பிறப்பிக்க முடியும், ஆனால் இதை வைத்துக் கொண்டு எப்படி முழு அடிப்படை உரிமைகளையும் பறிக்க முடியும்?
எனவே எமர்ஜென்சியின் 352-ம் சட்டப்பிரிவின் கீழ் எதுவெல்லாம் அனுமதிக்கப்படாதோ அது 144ம் பிரிவின் கீழும் அனுமதிக்கப்படாது. அரசு அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியாது. வர்த்தகங்களை அரசு எடுத்துக் கொள்ளலாம், ஆனால் வர்த்தகத்தையே எப்படி அழிக்க முடியும்? ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூற முடியுமா?
ஒருவர் அன்றைய தின கீமோதெரபிக்குப் போக வேண்டியுள்ளது. ஆனால் அவர் கிளம்ப முடியாது, காரணம் 144 தடை உத்தரவு. அரசு எனக்கு பாதுகாவல் அளிக்க வேண்டும். அது எப்படி என்னை வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று கூற முடியும்? மருத்துவமனைகள் திறந்திருக்கலாம், ஆனால் நான் எப்படி அங்கு செல்ல முடியும்?
எனது உரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கலாம் ஆனால் கட்டுப்பாடுகளின் நடைமுறைகளின்படி என் உரிமையையும் அனுமதிக்க வேண்டுமல்லவா? அரசுதான் மக்களைக் காக்க வேண்டும். அரசு தான் காக்க வேண்டிய உரிமையை என்னிடமிருந்து எப்படி பறிக்க முடியும்? என்று கபில் சிபல் தன் வாதத்தை முன் வைத்தார்.
காஷ்மீர் டைம்ஸ் எடிட்டர் சார்பில் ஆஜரான பிருந்தா கோவர், “காஷ்மீரில் கம்யூனிகேஷன் சேவைகளை முடக்கியதற்கு ‘தேச விரோத சக்திகள்’ துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதே காரணம் என்று கூறுகின்றனர். ‘தேச விரோத சக்தி’ என்பதற்கு எந்த வித சட்ட விளக்கமும் இல்லை. கட்டுப்பாட்டு உத்தரவு எந்த ஒரு பிரிவினரையோ, குறிப்பிட்ட வர்க்கத்தினரையோ, குறிப்பிட்ட பகுதியைச் சேர்தவரையோ தேச விரோதம் என்று அடையாளப்படுத்தவில்லை. “ஜம்மு காஷ்மீரின் ஒட்டுமொத்த மக்களையும் தேச விரோதிகள் என்று வகைப்படுத்துகின்றனரா? எனவே இந்தப் பதம் சட்ட விளக்கங்களுக்குச் சவால் விடுக்கிறது.
கட்டுப்பாடுகளுக்கு சட்டம் ஒழுங்கு காரணமாக கூறப்படுகிறது, ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்குள் கம்யூனிகேஷன் முடக்கம் எப்படி சாத்தியம்? அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒவ்வொரு செயலுமே பொது ஒழுங்கைக் குலைப்பதாக இருக்க வேண்டியதில்லையே” என்றார்.
இதனையடுத்து அரசு விளக்கம் அளிக்க நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT