Published : 30 Jul 2015 09:08 AM
Last Updated : 30 Jul 2015 09:08 AM
30 ஜூலை காலை 3.17 மணி. அப்போது நம்மில் பலரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்திருப்போம். ஆனால், மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன், இறுதி முயற்சியாக இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்ற கதவுகளைத் தட்டினார். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது புது மாதிரியானது. தனது பிறந்தநாளன்றே தன்னை தூக்கிலிட வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டது மேமனின் கோரிக்கை. ஆனால், நீதிபதி மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பிரபுல்லா சி பண்ட், அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு யாகூப் கோரிக்கை மனுவை நிராகரித்தது.
முன்னதாக, கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்து தூக்கு தண்டனையை நிறைவேற்ற குறைந்தபட்சமாக 14 நாட்களாவது இடைவெளி விட வேண்டும் என கோரி வழக்கறிஞர்கள் சிலர் அவசர வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கையும் மிஸ்ரா தலைமையிலான அமர்வே விசாரித்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், யாகூப் மேமன் தான் ஒரு குற்றவாளி என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். அவருடைய கோரிக்கை மேலும் 14 நாட்களுக்கு மட்டும் வாழ வேண்டும் என்பதே. இந்த உலகை விட்டுச் செல்வதற்கு முன்னர் சில இறை நம்பிக்கை சார் நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள விரும்புகிறார்" என்றனர்.
காலை 4.50 மணி... யாகூப் தூக்கிலிட அதிகபட்சம் 2 மணி நேரங்களே இருந்த நிலையில், நீதிபதிகள் தங்கள் இறுதி உத்தரவை தெரிவித்தனர். அதாவது, "யாகூப் மேமனுக்கு தேவையான அளவு சந்தர்ப்பங்களை உச்ச நீதிமன்றம் வழங்கிவிட்டது. யாகூப் அவருக்கு இருந்த சட்ட வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறார். எனவே இனியும் அவருக்கு வாய்ப்புகள் வழங்குவது நீதியை கேலிக்கூத்தாக்குவது ஆகிவிடும்" என்றனர்.
பின்னர் அட்டர்னி ஜெனரலிடன், யாகூப் மேமன் குடும்பத்தினர் யாகூபை சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டதா என வினவினர். அதற்கு அட்டர்னி ஜெனரல் முகு ரோஹத்கி, யாகூப் குடும்பத்தினர் ஏற்கெனவே அங்கிருப்பதாக கூறினார்.
மேலும், யாகூப் கருணை மனுவை மகாராஷ்டிர ஆளுநர் நேற்று (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கே தள்ளுபடி செய்துவிட்டதாகவும், குடியரசுத் தலைவரிடம் யாகூப் தாக்கல் செய்த கருணை மனுவும் நேற்றிரவு 10 மணிக்கே தள்ளுபடி செய்யப்பட்டது என எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து யாகூப் மேமன் வியாழக்கிழமை காலையில் நாக்பூர் மத்திய சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT