Published : 02 Nov 2019 07:57 PM
Last Updated : 02 Nov 2019 07:57 PM
புதுடெல்லி,
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிச்சை எடுப்பதற்காக அனுமார் போல் வேடமணிந்த முஸ்லிம் இளைஞர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஜ்ரங்தளம் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது ஐபிசி 416 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள மாவட்டம் பரேலி. இங்குள்ள பிரபல அனுமார் கோயில் முன்பாக முகம்மது நசீம்(19) என்பவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இதற்காக நசீம் அனுமார் போல் நீண்ட வாலுடன் கூடிய வேடம் போட்டிருந்தார்.
அப்போது அந்த கோயிலுக்கு வந்த சில பஜ்ரங்தளம் தொண்டர்கள், இந்த வேடமணிந்து பிச்சை எடுப்பது தம் கடவுள் அனுமாரை அவமதிப்பதாகக் கருதி உள்ளனர். இதனால், நசீமை பிடித்து விசாரித்ததில் அவர் ஒரு முஸ்லிம் என்பது தெரியவந்துள்ளது.
உடனே, நசீம் மீது அருகிலுள்ள சுபாஷ்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன், அவரை ஒப்படைத்தும் விட்டனர். சுபாஷ்நகர் போலீஸார் நடத்திய விசாரணையில் கலைஞரான நசீம் பிச்சை எடுத்து பிழைப்பதற்காக இதுபோல் பல்வேறுவகை வேடமணிவது வழக்கம் எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சுமாஷ்நகர் காவல்நிலைய ஆய்வாளர் ஹரீஷ்சந்திரா ஜோஷி கூறும்போது, ‘அனுமார் போல் வேடமணிந்து நசீம் கோயிலுக்கு வரும் இந்து மதத்தினரை ஏமாற்றியதுடன், அவர்கள் நம்பிக்கைக்கும் ஊறு விளைவித்துள்ளார். எனவே, அவர் மீது ஆள்மாறாட்ட மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.’ எனத் தெரிவித்தார்.
இன்று காலை பரேலி சிறையில் அடைக்கப்பட்ட நசீம் அருகிலுள்ள முராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த நாடோடிக் கும்பலை சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறது. அவரது சரியான விலாசம் மற்றும் பெற்றோரை சுபாஷ்நகர் போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT