Published : 26 Mar 2014 02:54 PM
Last Updated : 26 Mar 2014 02:54 PM
வீடு, ஓய்வூதியம், சுகாதார வசதி கிடைப்பதை அடிப்படை உரிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவைத் தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது.
ஏழைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற உறுதிபூண்டு 6 அம்சங்கள் அடங்கிய இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏழ்மை நிலையில் உள்ள 80 கோடி பேரை நடுத்தர வகுப்பு நிலைக்கு உயர்த்துவதற்கும் தேர்தல் அறிக்கை உறுதி கொடுத்திருக்கிறது.
இளைஞர், மாணவர்களுக்கான சிறப்புத் திட்டமாக 10 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து 5 ஆண்டுகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.
எஸ்.சி., எஸ்டி, ஒ.பி.சி.யினருக்காக தற்போது அமலில் உள்ள இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பிற வகுப்புகளிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்வதற்கான வழிமுறை காணவும் காங்கிரஸ் முனைப்பு காட்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ‘மந்த நிலையில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 8 சதவீதத்துக்கு மீண்டும் உயர்த்துவோம்’ என்று சூளுரைத்தார்.
‘உங்கள் குரலும் எங்கள் வாக்குறுதியும்’ என்ற தலைப்பில் நாட்டின் சமூக பொருளாதார, அரசியல் மாற்றத்துக்கான 15 அம்சத் திட்டங்கள் அடங்கியதாக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, மகளிருக்கு அதிகாரம், எஸ்.சி, எஸ்.டி.களுக்கு கூடுதலான சட்டபூர்வ பாதுகாப்பு, ஒ.பி.சி.களின் நலனுக்கு பாதுகாப்பு ஆகியவை 15 அம்சத் திட்டத்தில் உள்ள மேலும் சில உத்தரவாதங்கள்.
சமூக பாதுகாப்பு உரிமை, கண்ணியமாக வாழும் உரிமை, மனித நேயத்துடன் கூடிய பணிச்சூழல், தொழில் முனைவு உரிமை ஆகியவற்றுக்கும் காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது. ஏற்கெனவே அமலில் உள்ள உணவுக்கு உத்தரவாதம், தகவல் உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை ஆகியவற்றுடன் இவை புதிதாக சேர்க்கப்படுகிறது.
சுகாதார உரிமையை செயல் படுத்திட ஒட்டு மொத்த உற்பத்தி யில் சுகாதார செலவுக்கான ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்த காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். மேலும் அனைவருக்கும் தரமான உடல் நலப்பாதுகாப்பு வசதி, இலவச மருந்துகள் விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருப்புப் பணப் பிரச்சினையை கையாள சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சரக்கு சேவை வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இந்த சட்டம் நிறைவேற்றப்படும். 16-வது மக்களவையின் முதல் ஆண்டில் புதிய நேரடி வரிகள் சட்ட மசோதா கொண்டு வரப்படும். இறக்குமதி செய்வதை தவிர்க்க இந்தியாவிலேயே பொருள் உற்பத்தியை பெருக்கிட ஊக்கம் தரப்படும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்பு தொழில்பேட்டைகள் அமைக்கப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு துணைபுரியும் என்ற நம்பிக்கையில் வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 1 டிரில்லியன் டாலர் செலவிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT