Published : 30 Oct 2019 10:33 AM
Last Updated : 30 Oct 2019 10:33 AM
புதுடெல்லி
உத்திரபிரதேச மாநிலத்தின் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் அரசு பங்களாக்களில் மின்சாரக்கட்டணம் நிலுவை ரூபாய் 13 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த நிலுவைத்தொகை உயர்வதை தடுக்க அவர்கள் குடியிருப்புகளில் பிரிபெய்டு மீட்டர்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யில் குறிப்பிட்ட பொதுமக்களிடம் மின்சாரக்கட்டணம் வசூல் செய்வது அம்மாநில அரசிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் ஒரு பகுதி அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் தாங்கள் குடியிருக்கும் அரசு பங்களாக்களின் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை எனப் புகார் உள்ளது.
இதுபோல், கட்டணம் செலுத்தாமல் மின்சார நிலுவை தொகை ரூ.13 ஆயிரம் கோடியாகி உள்ளது. இந்தநிலையை தடுக்கு உ.பி.யின் அரசு பங்களாக்களில் பிரிபெய்டு மீட்டர்களை பொருத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து உ.பி. மாநில மின்சாரத்துறை அமைச்சரான ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, ‘‘வரும் நவம்பர் 15 முதல் இந்த பிரீபெய்டு மீட்டர்களை பொருத்த உள்ளோம். இதன்மூலம், பயன்படுத்துவோரும் தன் பிரீபெய்டு மீட்டரை பார்த்து கவனமாக மின்சாரத்தை செலவு செய்ய முடியும். இதற்காக ஒரு லட்சம் மீட்டர்களை அரசு வாங்கி வைத்துள்ளது.’’ எனத் தெரிவித்தார்.
உ.பி.யில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குவோரும் பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தை நிலுவையில் வைத்து அதை காலி செய்து சென்று விடுவது உண்டு. இதனால், அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் பிரீபெய்டு மின்சார மீட்டர்களை பொருத்துவது அதிகமாகி வருகிறது. இந்தமுறையை தற்போது உ.பி. அரசே பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில், நிலுவைத்தொகையை வசூலிக்க வேண்டி அதன் பயன்பாட்டாளர்களிடம் தவணைமுறையில் செலுத்தவும் அரசு வலியுறுத்தி உள்ளது. உ.பி.யில் குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களது மின்தொடர்பை துண்டிக்கும் முறை கண்டிப்புடன் செயல்படுத்தப்படுவதில்லை.
பொது மின்கம்பங்களிலும் கொக்கிகளை மாலைவேளைகளில் மாட்டி மின்சாரத்தை திருடும் வழக்கமும் உள்ளது. இதனால், உபி அரசிற்கு மின்சாரத்தால் ஏற்படும் இழப்பும் அதிகம். கடந்த வருடம் ஒரு கிராமத்தில் அரசிற்கு தெரியாமல் ஒரு டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்சாரம் திருடப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கிராமம், முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங்கின் சொந்த மாவட்டத்தை சேர்ந்தது என்பதால் பல வருடங்களாக அதை பிடிக்க அரசு அதிகாரிகள் தயங்கி வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT