Published : 29 Oct 2019 11:28 AM
Last Updated : 29 Oct 2019 11:28 AM
புதுடெல்லி,
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அவர் முன் 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் நிலுவையில் இருக்கின்றன.
இன்னும் 10 வேலைநாட்கள் மட்டுமே தலைமை நீதிபதி பணியாற்ற இருக்கும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முதலாவது அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலவழக்காகும். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அரோரா, சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த 2.77 ஏக்கர் நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளத் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் எஸ்ஏ.போப்டே,டி.ஒய்.சந்திரசூட்,அசோக் பூஷன்,எஸ்ஏ.நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியில் இருந்து நாள்தோறும் விசாரணை நடத்திவந்தது. அனைத்து தரப்பினரும் வாதங்கள் முடிந்தநிலையில், தேதி குறிப்பிடாமல் கடந்த 18-ம் தேதி தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஒத்திவைத்தார். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இது தவிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு கேரளாவில் இந்த தீர்ப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 65 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி, நூற்றாண்டுகளாக அங்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது என்று சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, மத்திய அரசு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனுதாரர்கள் புகார் அளித்தும், சிபிஐ முதல் தகவல் அறிக்கையை ஏன் பதிவு செய்யவில்லை என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும், அரசின் தகவலால், வழிகாட்டுதலால், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் ரபேல் வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நான்காவதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறா திரித்துக் கூறி, காவல்காரர் திருடன் என்று ரஃபேல் வழக்கில் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பாஜக எம்.பி. மீனாட்சி லெகி தொடர்ந்த அவதூறு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் நான் அந்த தகவலைத் தெரிவித்தேன் என்று ராகுல் காந்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது.
ஐந்தாவதாக, நாடாளுமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவின் அரசியலமைப்பு செல்லுபடி குறித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளும் அடுத்துவரும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT