Published : 11 Jul 2015 10:05 AM
Last Updated : 11 Jul 2015 10:05 AM
விவாகரத்து செய்ய விரும்பும் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவி மார்களிடம் நேரில் வராமல் `தலாக்’ கூறுவதற்கு தடை விதிக்க வேண் டும் என்று மத்திய அரசிடம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு, மே மாதம், மத்திய மகளிர் மற்றும் குழந்தை கள் நலத்துறை சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. பொதுநலம் மற்றும் கல்வி அறிஞர்கள் 14 பேர் கொண்ட இக்குழுவிடம் அனைத்து மதங்களை சேர்ந்த பெண்களின் நிலை குறித்து ஆய்வுசெய்து 2 ஆண்டுகளுக்குள் அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டது.
இந்நிலையில் இக்குழு தனது அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், “முஸ்லிம் பெண்களிடம் சமூக வலைதளங்கள், தொலைபேசி, குறுஞ்செய்தி போன்றவை மூலமாக 3 முறை தலாக் கூறுவது அவர்களை அதிக அளவில் காயப்படுத்துகிறது. அவர்களின் திருமண உறவை பாதுகாப்பற்றதாக்கி விடுகிறது. இதனால் ஒருதலைப்பட்சமான அந்த முறைக்கு தடை விதிக்க வேண்டும்” என்ற பரிந்துரை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது “சிறுபான்மையினர் தொர்பான முக்கிய முடிவுகளை மிகவும் யோசித்து ஜாக்கிரதையாக எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பரிந்துரை மீது உள்துறை, சட்டம், சிறுபான்மையினர் நலன் ஆகிய அமைச்சகங்களிடம் ஆலோசனை செய்த பின் இறுதி முடிவு எடுக் கப்படும். இது தொடர்பாக வரும் 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ள ஆலோசனைக் கூட்டங்களை 2 வாரங்களில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை மீது முஸ்லிம் அமைப்புகளிடமும் கருத்து கேட்கப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.
வெளிநாடு மற்றும் வெளியூர் களில் பணியாற்றும் முஸ்லிம் ஆண் கள் தங்கள் மனைவிமார்களுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து நேரில் வந்து பேசி தீர்க்க முடியாதபோது, தொலை பேசி, குறுஞ்செய்தி, ஸ்கைப், பேஸ்புக் போன்றவை மூலம் 3 முறை `தலாக்’ கூறிவிட்டு தங்கள் திருமணத்தை ரத்து செய்து கொள்கின்றனர்.
இது மிகவும் தவறான முறை என உணர்ந்த பாகிஸ்தான், சவுதி அரேபியா, துனீசியா, துருக்கி, அல்ஜீரியா, இராக், ஈரான், இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் நாடுகள் இம்முறைக்கு தடை விதித்துள்ளன. எனினும், இந்த முறையை இந்தியாவின் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அனுமதித்து வருகிறது.
இது குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சன்னி மறையியல் துறைத் தலைவர் பேராசிரியர் முப்தி ஜாஹித் அலி கான் கூறும்போது, “குர் ஆனில் குறிப்பிட்டுள்ளபடி இல்லாமல், முஸ்லிம்களின் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் புரிதலுக்கு ஏற்றவாறு இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு தடை விதிக்க மத்திய அரசு முயன்றால் தேவையற்ற சர்ச்சைக்குள் சிக்கும் வாய்ப்புள்ளது. அதிலும் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், இதன் மீது முடிவு எடுக்கும் பொறுப்பை எங்களை போன்ற முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் அமைப்புகளிடம் விட்டு விடுவதுதான் நல்லது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT