Published : 09 Oct 2019 11:27 AM
Last Updated : 09 Oct 2019 11:27 AM
பெய்ஜிங்
இந்தியாவுக்கு வரும் 11 மற்றும் 12 தேதிகளில் வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேச உள்ளார் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா யுன்யிங் இன்று பெய்ஜிங்கில் நிருபர்களிடம் கூறுகையில், "சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாட்கள் பயணமாக இந்தியாவின் மாமல்லபுரத்துக்கு வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். மாமல்லபுரத்தில் நடக்கும் அதிகாரபூர்வமற்ற சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து அதிபர் ஜி ஜின்பிங் பேச உள்ளார். அதன்பின் 13-ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் செல்கிறார்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அதிகாரபூர்வமற்ற முறையில் நடத்தும் 2-வது சந்திப்பு இதுவாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு உஹான் நகரில் இருவரும் சந்தித்துப் பேசினார்கள்.
இரு நாட்கள் நடக்கும் இந்தச் சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், பிரதமர் மோடி சர்வதேச விவகாரங்கள், பிராந்திய பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே எந்தவிதமான புரிந்துணர்வு ஒப்பந்தம், கூட்டாகச் சந்திப்பு போன்றவை ஏதும் இடம் பெறாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இது இரு தலைவர்களும் நடத்தும் அதிகாரபூர்வமற்ற சந்திப்பாகும். இந்தச் சந்திப்பில் எந்தவிதமான இலக்குகளும் வைத்து ஆலோசிக்கப் படாது. இரு தலைவர்கள் சந்திப்பின் நோக்கம் என்பது, இரு நாடு மக்களின் சந்திப்பை, நட்புறவை அதிகப்படுத்துதல், இந்திய -சீனா எல்லையில் அமைதி, நிலைத்தன்மையை உருவாக்குதலாகும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், தன்னுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களையும் உடன் அழைத்து வர உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாம் விவகாரத்தில் சீனா, இந்திய ராணுவ வீரர்கள் சிலிகுரி பகுதியில் உள்ள சிக்கன் நெக் பகுதியில் 73 நாட்கள் பாதுகாப்பில் ஈடுபட்டதால், பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சீன ராணுவம் சிலிகுரி அருகே சாலை அமைக்க முயல, இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம், இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் தணிந்தது. சாலை அமைக்கும் திட்டத்தையும் சீனா திரும்பப் பெற்று, இரு தரப்பு ராணுவத்தினரும் படைகளை வாபஸ் பெற்றனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு நாளை மறுநாள் வர உள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவும் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சீனாவின் பிரதமர் லீ கெகியாங்கை நேற்று சந்தித்துப்பேசிய இம்ரான் கான், இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சீன அதிபரின் இந்திய வருகைக்கு முன்பாக, நேற்று சீன வெளியுறவுத்துறை விடுத்த அறிவிப்பில், "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்" என்று தெரிவித்து நிறுத்திக்கொண்டது
ஆனால், ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து ஏதும் பேசவில்லை.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT