Published : 04 Oct 2019 04:59 PM
Last Updated : 04 Oct 2019 04:59 PM
புதுடெல்லி
இந்திய வான்வெளியில் ரஃபேல் விமானம் எப்போது பறக்கும் என்பதற்கான பதிலை இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதூரியா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை நாள் வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதூரியா இன்று ஊடகங்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ''ரஃபேல் போர் விமானங்கள் வரும் 8-ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தியாவுக்கு எப்போது வரும்?'' எனக் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதூரியா பதில் அளித்துப் பேசுகையில், "இந்திய அரசு 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து வாங்க இருக்கிறது. இதில் முதல் 4 ரஃபேல் போர் விமானங்கள் வரும் 2020-ம் ஆண்டு மே மாதத்தில்தான் இந்தியாவுக்கு வரும். அதன்பின்புதான் இந்திய வானில் ரஃபேல் விமானங்கள் பறப்பதைக் காண முடியும். அதுவரை நம்முடைய விமானிகள் ரஃபேல் விமானத்தை ஓட்டி பயிற்சி பெறுவார்கள்.
ரஃபேல் விமானத்தை ஒப்படைக்கும் முன் இந்திய விமானப்படையின் ஆய்வுக்குழு கடந்த மாதம் சென்று அனைத்துவிதமான பூர்வாங்கப் பணிகளையும் முடித்துவிட்டது. ஆவணங்கள் மாற்றம் விஷயத்திலும் விமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்தவாரம் பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது
கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களைத் தனியாக வாங்கும் ஒப்பந்தம் ஏதும் இல்லை. 114 போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது
முதல் ரஃபேல் போர் விமானத்தின் வால் பகுதியில் ஆர்பி-01என்று விமானப்படையின் முன்னாள் தலைவர் பெயர் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக்-21 ரக பைஸன் விமானங்கள் டிசம்பர் முதல் மார்ச் மாதத்துக்குள் படிப்படியாக மாற்றப்படும். அதன் தொழில்நுட்பங்கள் பழமையடைந்துவிட்டதால் அவை மாற்றப்படுகின்றன" என்று ராகேஷ் குமார் சிங் பதூரியா தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT