Published : 01 Oct 2019 05:51 PM
Last Updated : 01 Oct 2019 05:51 PM
ரயிலில் பயணம் செய்த தாயைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த இளைஞர் ஒருவரின் ஒற்றை ட்வீட், அவரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளது.
சாஷ்வத் என்னும் இளைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய தாய் ஷீலா பாண்டேவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 28.09.2019 அன்று கிளம்பிய அஜ்மீர்- சீல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணம் செய்கிறார். எஸ்5 கோச்சில் அவர் உள்ளார். ரயில் 12 மணி நேரத் தாமதத்தில் வந்து கொண்டிருக்கிறது.
என் தாய் நலமாக உள்ளாரா என்று தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து உதவி செய்யுங்கள்'' என்று கோரியிருந்தார். அதில் @PiyushGoyal, @PiyushGoyalOffc, @RailMinIndia என ரயில்வே அமைச்சரையும் அமைச்சகத்தையும் டேக் செய்திருந்தார்.
இதற்கு உடனடியாகப் பதிலளித்த Indian Railways Seva ட்விட்டர் பக்கம், மேலும் சில விவரங்களைக் கேட்டது. அதற்கு சாஷ்வத் பதிலளித்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைக் குறிப்பிட்டு, 'ரயில்வே துறையின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி' என்று சாஷ்வத் குறிப்பிட்டிருந்தார். இதைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள ரயில்வே அமைச்சகம், ''இந்திய ரயில்வே தன்னுடைய பயணிகள் மீது அக்கறை கொண்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் தன்னுடைய தாயைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மகன் ஒருவர் கேட்டிருந்தார். நாங்கள் உடனடியாக அவரின் தாயைத் தொடர்பு கொண்டு, இருவரையும் பேச வைத்தோம்'' என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ரயில்வே அமைச்சகத்தின் நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT