Published : 23 Sep 2019 04:12 PM
Last Updated : 23 Sep 2019 04:12 PM
புதுடெல்லி,
நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்கள் விவகாரத்தில் தலையீடு இருப்பது நீதித்துறைக்கு நல்லதல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி ஏ.ஏ.குரேஷி திரிபுரா தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
இதில், நீதித்துறை நியமனங்கள், பணியிட மாற்றங்கள் உள்ளிட்டவை ‘நீதிபரிபாலனத்தின் வேரடியாகும்’ என்றார், மேலும் நீதித்துறை மதிப்பாய்வு கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நீதித்துறை நீதிபரிபாலனத்தில் தலையீடு என்பது நீதித்துறை என்ற ஸ்தாபனத்துக்கு நல்லதல்ல” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்தார்.
நீதிபதி ஏ.ஏ.குரேஷியை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மே 10ம் தேதி கொலீஜியம் பரிந்துரைத்தது, அதன் பிறகு அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இரண்டு தொடர் கடிதங்களை அனுப்பியது. இதனையடுத்து செப்.5ம் தேதி தீர்மானமிட்டு செப்20ம் தேதி வெளியிடப்பட்ட தகவலில் ஏ.ஏ.குரேஷியை திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தாஹில்ரமானி விவகாரத்திலும் சர்ச்சைகள் கிளம்பியது, இவர் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் எதிர்த்தது.
இந்தப் பின்னணியில் தற்போது இந்த வழக்கில் குஜராத் வழக்கறிஞரக்ள் சங்கத்தின் முத்த வழக்கறிஞரான அர்விந்த் தத்தார், நீதிபதி குரேஷி பணியிட மாற்ற நியமன உத்தரவை நிலுவையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
செப்.5ம் தேதி மாற்றியமைக்கப்பட்ட முடிவை அரசு ஏற்கும் வரை தங்கள் மனுவை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று தத்தார் வாதிட்டார், இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மத்தியப் பிரதேச தலைமை நீதிபதியாக குரேஷி பரிந்துரைக்கப்பட்ட மே. 10ம் தேதி பரிந்துரை மீது அரசு நீண்ட காலம் மவுனம் சாதித்ததை குஜராத் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்த்தது. இந்நிலையில் குரேஷியை திரிபுராவுக்கு மாற்றும் உத்தரவு வழக்கறிஞர்கள் மனுவை பெருமளவில் பயனற்றதாக்கியுள்ளதாக தெரிகிறது.
மே 10ம் தேதி முடிவுக்கும் செப்.5ம் தேதி மாற்றி எடுத்த முடிவுக்கும் எந்த ஒரு காரணமும் விளக்கப்படவில்லை, மாறாக அரசிடமிருந்து ஆகஸ்ட் 23, மற்றும் 27 தேதிகளில் வந்த இரண்டு கடிதங்களையே உச்ச நீதிமன்றம் மாற்றத்திற்கான காரணம் என்று கூறியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றத்திn தற்போதைய மிக மூத்த நீதிபதியாவார் குரேஷி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT