Published : 20 Sep 2019 05:30 PM
Last Updated : 20 Sep 2019 05:30 PM
மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி 135 தொகுதிகளில் உறுதியாகப் போட்டியிடும் என்று சிவேசனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாஜகவை ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவாக இது இருப்பதாக கூறப்படுவதால், இந்த முறையும் கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே தொகுதிகள் பிரிப்பதில் கடைசி நேரம் வரை இழுபறி நீடித்தது.
பாஜகவுக்கு 120 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று சிவசேனா கூறியது. ஆனால், பாஜக அதற்கு சம்மதிக்கவில்லை. கடைசி நேரத்தில் 25 ஆண்டுகள் கூட்டணியை உடைத்து இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன.
இந்தத் தேர்தலில் சிவசேனா 282 இடங்களில் போட்டியிட்டு 63 இடங்களையும், பாஜக 260 இடங்களில் போட்டியிட்டு 122 இடங்களையும் வென்றன. மற்ற கட்சிகளின் ஆதரவுடனும், சிவசேனா வெளியில் இருந்து அளித்த ஆதரவால் பாஜக ஆட்சி அமைத்து 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. மக்களவைத் தேர்தலில் மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து 48 தொகுதிகளில் 41 இடங்களில் அமோக வெற்றி பெற்றன.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது மீண்டும் இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பிரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக அரசு வலுவாக இருப்பதால், இந்த முறை 120 இடங்களுக்கு அதிகமாக சிவசேனாவுக்கு வழங்க முடியாது என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவும், சிவசேனாவும் தலா 135 தொகுதிகளில் போட்டியிடட்டும் மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கலாம் என்று சிவசேனா கூறுகிறது. இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் புகழால்தான் சிவசேனா கட்சி அதிக இடங்களில் வென்றது. ஆதலால் நாங்கள் அதிகமான இடங்களில் போட்டியிடுவோம் என்று பாஜக தரப்பில் பேசப்படுகிறது. இதனால் தொகுதி எண்ணிக்கையைப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் முரண் ஏற்பட்டுள்ளது
இந்த சூழலில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று நிருபர்களுக்கு மும்பையில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், " மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சியும், பாஜகவும் தலா 135 இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுப்போம். இது பாஜக தலைவர் அமித் ஷாவும், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோருடன் சேர்ந்து முன்பே எடுக்கப்பட்ட முடிவுதான். இந்தத் திட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் கூட்டணி குறித்த இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
ஆனால், சிவசேனா கட்சித் தலைவரின் இந்த அறிவிப்புக்கு பாஜக சார்பில் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. ஒருவேளை இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமைந்துவிட்டால், மீதமுள்ள 18 இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைக்கும்.
இதில் முக்கியமானதாக பாஜகவுடன் இருந்த விதர்பா ஜன் அந்தோலன் சமிதி கிஷோர் திவாரி கட்சி பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து மோதலாலும், கொள்கை முரண்பாடுகளாலும் சிவசேனாவுடன் சேர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ் தகவல்களுடன்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT