Published : 19 Sep 2019 01:35 PM
Last Updated : 19 Sep 2019 01:35 PM
புதுடெல்லி
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், பாஜகவையும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பையும் இணைத்துப் பேசிய விவகாரத்தில் அவருக்கு எதிராக கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கடந்த மாதம் 30-ம் தேதி பாஜக குறித்து ஒரு கருத்து தெரிவித்தார். அதில், "பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் பாஜகவுக்கும், பஜ்ரங் தளம் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது. ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பாஜக நிதி பெறுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
திக்விஜய் சிங்கின் இந்தக் கருத்துக்கு பாஜக, பஜ்ரங் தளம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் சட்டப்பிரிவு அமைப்பாளர் ராஜேஷ் குமார் என்பவர் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திக்விஜய் சிங்கிற்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அக்டோபர் 9-ம் தேதி நீதிபதி சமர் விஷால் முன் விசாரணைக்கு வருகிறது.
ராஜேஷ் குமார் தனது மனுவில், "காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பாஜகவுக்கு எதிராகப் பயன்படுத்திய வார்த்தைகள் மரபுக்கு எதிரானவை. ஒட்டுமொத்த முறையையும் கிண்டலுக்கு ஆளாக்குகிறார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பாஜக நிதி பெறுகிறது என்ற பேச்சு மக்கள் மத்தியில் பாஜக குறித்த தவறான கருத்தை உருவாக்கும்.திட்டமிட்டே பாஜகவின் நற்பெயரைக் கெடுக்க திக்விஜய் சிங் முயல்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுதவிர உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள காசியா காவல் நிலையத்திலும் திக்விஜய் சிங்கிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக எம்எல்ஏ ரஜினிகாந்த் மணியின் மகன் திவ்யேந்து மணி என்பவர் இந்தப் புகாரை போலீஸில் அளித்துள்ளார். இதையடுத்து திக்விஜய் சிங் மீது ஐபிசி 153 ஏ, 295ஏ, 298, 505, ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT