Published : 15 Jul 2015 02:45 PM
Last Updated : 15 Jul 2015 02:45 PM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையில் இப்போதைக்கு மாற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை விரிவாக விசாரித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. பின்னர், கருணை அடிப்படையில், நளினி யின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூன்று பேரின் கருணை மனுக்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
கருணை மனுவை நீண்டகாலம் கிடப்பில் வைத்திருந்ததை காரணம் காட்டி, விடுதலை செய்ய இதுவே போதுமான காரணம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கும் முடிவு மாநில அரசிடம் விடப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுவித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர்கள் அனைவரும் விடுதலையாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாக குற்றவாளிகளை விடுவிக்க முடியாது. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்று கூறி வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி, ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழக அரசு எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. தண்டனை குறைப்பு அதிகாரம் அரசியல் சட்ட பிரிவு 72-ன் படி குடியரசு தலைவர், 161-ன் படி ஆளுநர், 32-ன் படி நீதிமன்றம் ஆகிய மூன்றுக்கும் உள்ளது. இதில், ஒரு அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனையை குறைத்த பின், மீண்டும் இன்னொரு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்ய முடியுமா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி அரசியல் சாசன அமர்வின் முடிவுக்கு அனுப்பப்பட்டது.
மாநிலங்களுக்கு தடை
இந்த தீர்ப்பால், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தள்ளிப் போனது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு விசாரணை அமைப்பாக உள்ள ஒரு வழக்கில் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து விடுதலை செய்ய முடியாது என்று வாதிடப்பட்டது. ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும்முன் பின்பற்றப்பட வேண்டிய எந்த நடைமுறையையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்றும் மத்திய அரசு வாதிட்டது. இதேபோன்று மற்ற மாநிலங்களில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வழக்குகளும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தடை விதித்தனர்.
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேர் மற்றும் கர்நாடகா, பிஹார், மேற்குவங்க மாநிலங்களில் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க முடியுமா? என்ற முக்கிய கேள்வி நீதிமன்றத்தின் முன்பு உள்ளதை வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டினர். தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘குறைந்தது 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகளை மட்டுமாவது விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அதற்கேற்ப, ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் இப்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய விரும்ப வில்லை. வழக்கை முழுமையாக விசாரிக்க விரும்புகிறோம். நாங்கள் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்கியபின், ஆயுள் கைதிகள் சிறையில் இருப்பதா, விடுதலையாவதா என்பதை முடிவு செய்யலாம்’ என்று உத்தர விட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT