Published : 28 Jul 2015 08:23 AM
Last Updated : 28 Jul 2015 08:23 AM
அப்துல் கலாம் தமிழை மிகவும் நேசித்து வந்ததாக டெல்லி தமிழர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி வாழ் தமிழரும் அகில இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான முகுந்தன் கூறும்போது, “கலாம் ஐயா குடியரசு தலைவராக இருந்த வரையில் அவரது மாளிகைக்கு அதிகமாக வருகை தந்தவர்கள் தமிழர்களே எனக் கூறலாம். அவரும் தமிழகத்தில் இருந்து வருகை தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மறுக்காமல் நேரம் ஒதுக்கினார்.
குடியரசு தலைவராக இருந்த போது டெல்லி தமிழ் சங்கத்தில் நடந்த தமிழ் கவியரங்கத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். குடியரசு தலைவர் மாளிகையின் வரவேற்பறையில் திருக்குறள் பெரிதாக தெரியும்படி டிஜிட்டல் போர்டை மாட்டி வைத்தார்.” என நினைவு கூர்ந்தார்.
தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு வரும் தமிழ் திரைப்படத்துறையினர் கலாமை சந்திக்காமல் சென்றதில்லை எனவும், இதில் நகைச்சுவை நடிகர் விவேக் அவரை அதிக முறை சந்தித்தவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல், தம் தமிழ் மீதான ஆர்வத்தை காட்டும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து வரும் பொது விழாக்களின் அழைப்பை கலாம் பெரும்பாலும் தவிர்த்ததில்லை எனவும் கருதப்படுகிறது.
சொந்த செலவில் பயணம்
ஒரு குடியரசுத் தலைவராக கலாம் செய்யும் பயணங்கள் அனைத்தின் செலவுகளையும் அரசு ஏற்கும் நிலை இருந்தாலும், அதை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் கலாம் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். உதாரணமாக, தனது பதவி ஏற்புக்கு முன்பு டெல்லி வந்த தனது உறவினர்களின் அனைத்து பயண செலவுகளையும் தர அரசு முன் வந்தும் மறுத்துவிட்டு, அதை தானே ஏற்றுக்கொண்டார். அத்துடன், தாம் சொந்த அல்லது குடும்ப விஷயமாக தமிழகம் சென்ற சமயங்களிலும் தம் அரசு செலவை கலாம் ஏற்க மறுத்து உள்ளார்.
இதுபோன்ற கலாமின் பல நல்ல செயல்கள் இன்றும் குடியரசு தலைவர் மாளிகையின் அலுவலர்கள் இடையே பெருமையாகப் பேசப்பட்டு வருகிறது. இதை தாம் ஓய்வு பெற்ற பிறகும் கடைப்பிடித்து வந்திருக்கிறார் கலாம்.
சிகை அலங்காரம்
குடியரசு தலைவர் பதவிக்கு என அவர்களது நடை, உடை, பாவனைகள் போன்றவைகளில் இருந்த பல மரபுகளையும் கடைப்பிடித்த கலாம், தன் சிகை அலங்காரத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை. இதை மாற்றிக் கொள்ளும்படி பலரும் கூறிய பின்பும் அவர்களிடம் அன்பாக மறுத்து விட்டார் கலாம்.
இதற்கு அவர் தம் சிகை அலங்காரத்தை அந்த அளவிற்கு நேசித்தது ஒரு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது. வழக்கமாக ஓய்வு பெற்ற பின் ஒதுங்கி இருக்கும் பெரும்பாலான குடியரசு தலைவர்கள் போல் அன்றி, தனக்கு அரசு ஒதுக்கிய எண் 10, ராஜாஜி மார்க் பங்களாவில் குடியிருந்த கலாம், இரவு 11.00 மணி வரையும் தம்மை சந்திக்க வருபவர்களுக்கு நேரம் ஒதுக்கி வந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT