Published : 06 Sep 2019 01:48 PM
Last Updated : 06 Sep 2019 01:48 PM

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா

சசிகாந்த் செந்தில், படம்: சந்தோஷ் சாகர்

கண்ணன் கோபிநாதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் மற்றுமொரு ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2009-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவரான சசிகாந்த் செந்தில், தமிழகத்தைச் சேர்ந்தவராவார். இவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். 2009-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். 2009-2012 காலகட்டத்தில், பெல்லாரி மாவட்டத்தின் துணை ஆணையராக பதவி வகித்தார். சிவமோகா கிராம பஞ்சாயத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருமுறை பணி செய்துள்ளார். சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களின் துணை ஆணையராகவும் அவர் இருந்துள்ளார். மேலும், நவம்பர் 2016 வரை தாது மற்றும் புவியியல் துறையின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 2017-ம் ஆண்டு, ஜூன் முதல் தட்சிண கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பதவி வகித்து வந்தார். அம்மாவட்டத்தின் மிகவும் செயல்மிக்க துணை ஆணையர் என்ற பாராட்டை பெற்றவர் சசிகாந்த் செந்தில்.

இந்நிலையில், அவர் இன்று (செப்.6) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "பன்முகத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள் சமரசம் செய்யப்படும் போது, அரசு அதிகாரியாக பணியை தொடர்வது நியாயமற்றது. வரவிருக்கும் நாட்கள், நாட்டின் அடிப்படையான கட்டமைப்பின் மீது மிகக் கடுமையான சவால்களை முன்வைக்கும். இம்மாதிரியான நிலையில், ஐஏஎஸ் அதிகாரியாக அல்லாமல், வெளியிலிருந்து நான் பணி செய்வதே அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும்", என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கேரள வெள்ள மீட்புப் பணிகளில் திறம்பட செயல்பட்டவரான, ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், ஆகஸ்ட் மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x