Published : 15 Jul 2015 08:53 AM
Last Updated : 15 Jul 2015 08:53 AM
ஆந்திராவில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு கோதாவரி மாகா புஷ்கரம் என்ற புனித நீராடும் விழா நேற்று தொடங்கியது. 12 நாட்களுக்கு நடைபெறும்இவ்விழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘கோதாவரி புஷ்கரம்’ விழா ராஜமுந்திரியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், இந்த விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. இந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் வரும். இது ‘ஆதி புஷ்கரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா வரும் 25 ந்தேதி வரை 12 நாட்களுக்கு நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள்.
கங்கை நதிக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய நதி கோதாவரி. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள திரியம்மகேஷ்வர் பகுதியில் பிரம்மம் கிரி மலையில் தொடங்கும் கோதாவரி, தெலங்கானா மாநிலத்தின் தர்மபுரி, காலேஷ்வரம், பாசரா, பத்ராசலம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆந்திர மாநிலத்தில் நுழைந்து, மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ராஜமுந்திரி, நரசாபுரம், கொவ்வூரு, அந்தர்வேதி வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.
கோதாவரி நதியில் ராஜமுந்திரி அருகே பாபி கொண்டலு எனும் இடத்தில்பல்வேறு துணை நதிகள் கலக்கின்றன. அதன் பிறகு அகண்ட கோதாவரி நதியாக வங்கக் கடலில் கலக்கிறது. பகீரதனின் முயற்சியால் பூமிக்கு வந்த கங்கை நதி திரேதா யுகத்தை சேர்ந்ததாகும். ஆனால் சுமார் 1,465 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் கோதாவரி, அதற்கு முந்தைய கிரேதா யுகத்தைச் சேர்ந்த புண்ணிய நதி என கூறப்படுகிறது. வனவாசம் சென்ற ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் கோதாவரி நதிக்கரையில் சில நாட்கள் தங்கியதாகக் கூறப்படுகிறது.
பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் பிரவேசிக்கின்றார். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி உண்டு. நமது நாட்டில் புஷ்கர விழா நடத்தப்படும் நதிகளும் 12 உள்ளன. இவை புஷ்கர நதிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
அதன்படி குரு மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது கங்கை நதி, ரிஷப ராசிக்கு செல்லும்போது நர்மதா நதி, மிதுன ராசிக்கு பிரவேசிக்கும்போது சரஸ்வதி, கடக ராசியில் பிரவேசிக்கும்போது யமுனா நதி, சிம்ம ராசியில் பிரவேசிக்கும்போது கோதாவரி, கன்னி ராசியில் பிரவேசிக்கும்போது கிருஷ்ணா நதி, துலாம் ராசியில் பிரவேசிக்கும்போது காவிரி, விருச்சிக ராசியில் பிரவேசிக்கும்போது பீமரதி நதி, தனுசு ராசியில் பிரவேசிக்கும்போது புஷ்கர வாகினி, மகர ராசியில் பிரவேசிக்கும்போது துங்கபத்ரா நதி, கும்ப ராசியில் பிரவேசிக்கும்போது சிந்து நதி, மீன ராசியில் பிரவேசிக்கும்போது பிரஹிதா நதி ஆகியவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கர விழா நடத்தப்படுவது ஐதீகம்.
தற்போது சிம்ம ராசியில் குரு பிரவேசித்துள்ளதால் கோதாவரி நதியில் மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த கோதாவரி புஷ்கர விழா, மகா புஷ்கரம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், 144 ஆண்டுகளுக்கு முன்னர் அப் போதைய ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இதே கோதாவரி நதியில் புஷ்கர விழா நடத்தப்பட்டது. இதற்கு பிறகு வரும் 2,159 ஆண்டுதான் மகா புஷ்கரம் வரும். இந்த மகா புஷ்கரம் முதல் 12 நாட்கள் முன் புஷ்கரம் என்றும் அடுத்த 12 நாட்கள் பின் புஷ்கரம் என்றும் நடத்தப்படுகிறது. இது கோதாவரி நதியில் மட்டுமே நடத்தப்படும். இந்த புஷ்கர விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 5 முதல் 6 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஆந்திர அரசு ரூ.1,650 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. 262 இடங்களில் நீராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு என தனித் தனியாக 1,400 தற்காலிக கழிவறை கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,927 அரசு பஸ்கள் கூடுதலாக ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங் களுக்கு 13 சிறப்பு ரயில்களும், மேலும் 36 ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள் ளன.
ஹைதராபாதில் இருந்து ராஜமுந்திரிக்கு 8, சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு 1 சிறப்புவிமானமும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரம் துப்பரவு தொழிலாளர்கள் மற்றும் 7,000 கூடுதல் போலீஸாரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT