Published : 02 Sep 2019 06:08 PM
Last Updated : 02 Sep 2019 06:08 PM

பாஜகவுக்கும் ஐஎஸ்ஐக்கும் தொடர்பு: திக்விஜய் கருத்து வெட்கக்கேடு, சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித்  பித்ரா : கோப்புப்படம்

புதுடெல்லி,

பாஜகவுக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் தொடர்பு இருப்பதாக திக்விஜய் சிங் கூறியது வெட்கக் கேடு, இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நேற்று அளித்த பேட்டியில், " பாஜக, பஜ்ரங் தளம் அமைப்பும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. முஸ்லிம்களைக் காட்டிலும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் பாகிஸ்தானுக்கு அதிகமாக உளவு பார்க்கிறார்கள்" என்று பேசி இருந்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி சமூகத்தை வகுப்புவாதம் கொண்டு துண்டாட முயல்கிறது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் மிகப்பெரிய தோல்வி அடைவதற்கு முக்கிய பங்காற்றிய 'நவரத்தினங்களில்' திக்விஜய் சிங்கும் ஒருவர்.

திக்விஜய் சிங் பாஜக குறித்து கூறியது கவலையளிக்கிறது, வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. இந்த கருத்து நாட்டுக்கு எதிரானது, பிளவுபடுத்தும் கருத்து. மனச்சிதைவில் அவர் இருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

உண்மையில் ராகுல் காந்தி, மணி சங்கர் அய்யர், குலாம் நபி ஆசாத், சாம் பிட்ரோடா, சல்மான்குர்ஷித், சுஷில் குமார் ஷிண்டே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி , திக்விஜய் சிங் ஆகிய 9 பேர்தான் பாகிஸ்தானின் நவரத்தினங்கள். அவர்கள் பெருமை கொள்ளட்டும்.

காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் நாளேடுகளில் செய்தி வர வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியதைத் தான் பாகிஸ்தான் குறிப்பிட்டு, ஐ.நா.வில் கடிதம் வாயிலாகத் தெரிவி்த்துள்ளது. காஷ்மீரில் வன்முறை நடக்கிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று ராகுல் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று திக்விஜய் சிங் ஆளும் கட்சிக்கு எதிராக குற்றம் சாட்டி இருப்பது தீவிரமானது.இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும்.

வரம்பை மீறி பேசும்போது, காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவில்லை. பிரதமர் மோடிக்கு எதிராகப் பேசுவது இந்தியாவுக்கு எதிராகத்தான் முடியும். எதிர்கட்சியினரின் பல்வேறு கருத்துக்கள் இந்து தத்துவங்களுக்கு விரோதமாகவே இருக்கின்றன.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்ததால், தற்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பலர் கைது செய்யப்பட்டார்கள் என்பது கூறுவது தவறு. அங்கு பாஜக ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற தகவல் கிடைத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது.
இவ்வாரு சம்பித் பித்ரா தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x