Published : 31 Aug 2019 03:12 PM
Last Updated : 31 Aug 2019 03:12 PM
அசாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டு சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த கணக்கெடுப்பு 5 ஆண்டுகளாக நடைபெற்றது, மொத்த செலவு ரூ.1220 கோடி.
நீக்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபித்தால் மீண்டும் பட்டியலில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்ட 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் மீண்டும் தங்கல் குடியுரிமையை நிரூபித்தால் குடிமக்கள் பதிவேட்டில் மீண்டும் இடம்பெறலாம் என்று மாநில உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இதற்காகவென்றே உருவாக்கப்பட்ட 100 அயல்நாட்டினர் தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்ய முடியும். இந்தத் தீர்ப்பாயத்தின் எண்ணிக்கை 200 ஆக ஒரு மாதத்திற்குள் உயர்த்தப்படும். இவர்கள் இந்த தீர்ப்பாயத்திடம் 120 நாட்களுக்குள் முறையீடு செய்யலாம். பிறகு 6 மாத காலங்களில் இதன் முடிவுகள் வெளியிடப்படும். பிறகும் கூட உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
இது இன்று நேற்று உருவானதல்ல சுதந்திரம் பெற்ற பிறகே குடியேற்ற விவகாரம் அசாமில் தலையெடுத்தது. இதன் காலவரிசை வருமாறு:
1950: பிரிவினைக்குப் பிறகு அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகள் அசாமுக்குள் குடியேறத் தொடங்கினர். அப்போது குடியேற்றச் சட்டம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
1951: சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது
இந்த சென்சஸின் அடிப்படையில் முதல் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உருவாக்கப்பட்டது.
1957: குடியேற்றச் சட்டம் (அசாமிலிருந்து வெளியேற்றம்) ரத்து செய்யப்பட்டது.
1964-65: சிலபல பிரச்சினைகளினால் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகள் வருகை அதிகரிப்பு
1971: கிழக்குப் பாகிஸ்தானில் போர், பதற்றம் கொந்தளிப்பு காரணமாக புதிதாக அகதிகள் வருகை
1979-1985: 6 ஆண்டுகால அசாம் போராட்டம் தொடங்கியது. இதனை தலைமையேற்று நடத்தியது அசாம் அனைத்து மாணவர்கள் சங்கம் மற்றும் அனைத்து அசாம் கனசங்கம் பரிஷத் ஆகிய அமைப்புகள் ஆகும். இவர்கள் அகதிகள், குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களின் குடியுரிமையைப் பறிப்பது அகதிகளை வெளியேற்றுவதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
1983: மத்திய அசாமின் நெல்லீயில் படுகொலைகள் அரங்கேற்றம். 3000 பேர் கொல்லப்பட்டனர். சட்டவிரோதக் குடியேறிகள் சட்டம் இயற்றப்பட்டது.
1985: அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி முன்னிலையில் மத்திய அரசு, அசாம் மாநிலம், அசாம் மாணவர்கள் அமைப்பு, அனைத்து அசாம் கனசங்கம் பரிஷத் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் பிற பிரிவுகளுடன், மார்ச் 25, 1971 க்குப் பிறகு அசாமில் குடியேறியவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது.
1997: இந்தியக் குடியுரிமை கோரியவர்களில் சந்தேகத்துக்கு இடமானவர்களை தேர்தல் ஆணையம் ‘டி’ அதாவது டவுட்ஃபுல் என்று குறிப்பிட்டது.
2005: 1983-ல் இயற்றப்பட்ட சட்டவிரோதக் குடிபெயர்ந்தோர் வெளியேற்றச் சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மத்திய அரசு, மாநில அரசு, அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் கூடி 1951-ம் ஆண்டின் என்.ஆர்.சி.யை புதுப்பிக்க முடிவெடுத்தனர். ஆனால் இதில் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை.
2009: அசாம் பப்ளிக் ஒர்க்ஸ் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு தேர்தல்களில் அயல்நாட்டினர் பெயர்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் என்.ஆர்.சி.யைப் புதுப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
2010: சய்கவான், பார்பெட்டாவில் என்.ஆர்.சியை புதுப்பிக்கும் பைலட் புராஜெக்ட் தொடங்கப்பட்டது. இந்தத் திட்ட்டம் சய்கவானில் வெற்றியடைந்தது. பார்பெட்டாவில் நிகழ்ந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
2013: அசாம் பப்ளிக் ஒர்க்ஸ் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு என்.ஆர்.சி. பட்டியலை இறுதி செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
2015: என்.ஆர்.சி. பட்டியல் தயாரிப்புப் பணிகள் தொடங்கின.
2017: மொத்தம் 3.29 கோடி விண்ணப்பதாரர்களில் 1.9 கோடி பெயர்களை வரைவு என்.ஆர்.சி பட்டியலில் சேர்த்து டிசம்பர் 31 இரவு வெளியிடப்பட்டது.
ஜூலை 30, 2018: இன்னொரு வரைவு என்.ஆர்.சி. வெளியிடப்பட்டது. 2.9 கோடி பேர்களில் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
ஜூன் 26, 2019: 1,02,462 பேரை நீக்கிய கூடுதல் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 31, 2019: இறுதி என்.ஆர்.சி-தேசியக் குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT