Published : 28 Aug 2019 12:47 PM
Last Updated : 28 Aug 2019 12:47 PM

நம் தேசம் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலையின் வீரியத்தை மோடி அரசு உணரவே இல்லை: காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி,

நம் தேசம் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலையின் வீரியத்தை மோடி அரசு உணரவேயில்லை என வேதனை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிசர்வ் வங்கி ரூ.1லட்சத்து 76ஆயிரம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. ஒருவேளை ரிசர்வ் வங்கிக்கு ஒரு பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர் ஆளுநராக இருந்திருந்தால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது. ஆனால் ஆர்பிஐ ஆளுநராக அரசுக்கு இணக்கமாக செயல்படும் அதிகாரியல்லவா இருக்கிறார். இறைவன்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று(செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, "அரசாங்கம் எந்த ஒரு அதிகாரியையும் எந்த ஒரு அரசுத்துறையையும் குறுக்கிட்டு தலைவணங்கச் செய்யும் நிலையில் இருக்கிறது. அப்படியொரு நெருக்கடிக்கு இணங்கிய ஆர்பிஐ ஆளுநர் தனக்கு முந்தைய ஆளுநர்கள் எடுக்கத் தயங்கிய முடிவை சாதாரணமாக எடுத்துள்ளார்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், திக்விஜய் சிங்கும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி உபரி நிதி கைமாறும் பின்னணி:

சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் பல தங்களின் சராசரி உபரி நிதி கையிருப்பை 14% என நிர்ணயித்துள்ளன. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதி கையிருப்பு 28%-ஆக உள்ளது.

இந்நிலையில்தான், ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை அரசுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால், மத்திய அரசின் கோரிக்கைக்கு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வளைந்து கொடுக்கவில்லை. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் உடல் நலனை சுட்டிக்காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநரானார். இதையடுத்து ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரி நிதியை வைத்துக்கொள்ளலாம், எவ்வளவு உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான கூட்டத்தில், 2018-19-ம் நிதியாண்டின் உபரி நிதியான 1 லட்சத்து 23,000 கோடி ரூபாயும், திருத்தி அமைக்கப்பட்ட பொருளாதார முதலீட்டு வழிகாட்டுதலின் படி கண்டறியப்பட்ட உபரி நிதி 53,000 கோடி ரூபாயையும் மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மத்திய அரசுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் பல தவணைகளாக வழங்கப்பட உள்ளது.

இதன் அடிப்படையில்தான் உபரி நிதி கைமாறுகிறது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x