கணவர் கொடுத்த சூயிங்கத்தை ஏற்காத பெண்ணுக்கு ‘முத்தலாக்’ விவாகரத்து
லக்னோ
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே அம்ராய் என்ற கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் சிம்மி. இவர் தனது கணவர் சையது ரஷீதுடன் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்திற்கு கடந்த திங்கள்கிழமை சென்றிருந்தார். சிம்மி தனது கணவர் ரஷீது மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஏற்கெனவே வரதட்சிணை கொடுமை புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காகவே சிம்மி நீதிமன்றம் சென்றிருந்தார். நீதிமன்ற வளாகத்தில் சிம்மி தனது வழக்கறிஞருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு ரஷீது சூயிங்கம் கொடுத்துள்ளார். ஆனால் இதனை சிம்மி ஏற்க மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த ரஷீது, வழக்கறிஞர் முன்னிலையில் 3 முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
இது தொடர்பாக சிம்மி அளித்த புகாரின் பேரில் ரஷீதுக்கு எதிராக லக்னோ, இந்திரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய அதிகாரி நேற்று கூறினார்.
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் குழந்தை அழுததால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக புகார் எழுந்துள்ளது.
