Published : 14 Jul 2015 12:45 PM
Last Updated : 14 Jul 2015 12:45 PM
பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்டோர் இரங்கல்
ஆந்திர மாநிலத்தில் கோதாவரி மஹா புஷ்கரம் விழா தொடங்கிய முதல் நாளில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராஜமுந்திரியில் மஹா புஷ்கரம் விழா நேற்று தொடங்கியது. இதற்காக ஆந்திராவின் கிழக்கு, மேற்கு கோதாவரி மற்றும் தெலங்கானாவின் கம்மம், வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் கோதாவரி ஆற்றில் புனித நீராடுவதற்காக 262 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே உள்ள கோட்டகும்மம் பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் நேற்று காலை 6.26-க்கு புனித நீராடினர். இதனால் இப்பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுமார் 3 மணி நேரம் வரை கோட்டகும்மம் பகுதியின் முதல் நுழைவு வாயில் மூடப்பட்டது.
காலை 9.15 மணியளவில் முதல்வர் சென்ற பிறகு, இந்த வாயில் திறக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த வழியாக ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஒரு மூதாட்டி கீழே விழுந்தார். சிலர் குனிந்து அவரை மீட்க முயற்சித்துள்ளனர். அந்த நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமானது.
இதனால் கீழே விழுந்தவர்களை மிதித்துக் கொண்டே ஆற்றுக்குள் ஓடினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதை கவனித்த போலீஸாரும் பொது மக்களும் மயக்கமடைந்தவர்களை உடனடியாக ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ரூ.10 லட்சம் இழப்பீடு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த அவர், ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டறிந்தார். பலியானவர்களின் குடும்பத் திருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பலியா னவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித் துள்ளார்.
பெண்களே அதிகம்
கூட்ட நெரிசலில் சிக்கி பலியான வர்களில் பெண்களே அதிகம் என்றும் இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்த வர்களில் சிலரது உடல்கள் அடை யாளம் தெரியாததால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT