Published : 13 Aug 2019 04:02 PM
Last Updated : 13 Aug 2019 04:02 PM

துங்கபத்ரா அணை உடைந்து விட்டதாகக் காட்டுத்தீ போல் பரவிய வதந்தி: பீதியில் மக்கள் செய்வதறியாது அலைந்த அவலம்

பெல்லாரி (கர்நாடகா):

கர்நாடகாவில் துங்கபத்ரா அணை உடைந்து விட்டதாக விஷமிகள் சிலர் கிளப்பிவிட்ட வதந்தி காட்டுத்தீ போல் பரவ கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி தாலுக்காவின் சில கிராம மக்கள் பீதியில் செய்வதறியாது வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் அலைந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

கதேபாகிலு, அனெகொண்டி, சிக்கராம்பூர், ஹனுமன்ஹள்ளி, மற்றும் பிற கிராமத்தில் வதந்தியினால் இந்த பீதி பரவ மக்களில் பலம் மிக்கவர்கள் மலையில் ஏறினர். மற்றவர்கள் உயிர்ப்பயத்துடன் செய்வதறியாது அலைந்து திரிந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் லெஃப்ட் பேங்க் ஹை லெவல் கால்வாயில் சிறிய உடைப்பு ஏற்பட்டு 250 கன அடி நீர் பாய்ந்து வர அருகில் உள்ள பம்பாவனாவில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதுதான் துங்கபத்ரா அணை உடைந்து விட்டதான வதந்திக்கு மூலக்காரணமானது.

உதவி ஆணையர் பி.சுனில் குமார், காவல்துறை கண்காணிப்பாளர் ரேணுகா கே.சுகுமார் மற்றும் பிற மூத்த போலீஸ் அதிகாரிகள் வதந்தி பரவியதும் அதனால் ஏற்பட்ட பீதியையும் புரிந்து கொண்டு உடனடியாக களத்தில் இறங்கி வாகனங்களில் அறிவிப்பு வெளியிட்டபடி ‘பயம் வேண்டாம், அது ஒரு வதந்தி’ என்று கூறியதையடுத்து மக்கள் நிம்மதியாக மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x