Published : 13 Aug 2019 01:10 PM
Last Updated : 13 Aug 2019 01:10 PM
புதுடெல்லி,
விரக்தி, நம்பிக்கையின்மை, வழிகாட்டல் இல்லாத அரசியல் ஆகியவற்றால்தான் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறுபட்ட குரல்களில் பேசி வருகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்புச் சலுகைகளை வழங்கும் 370, 35ஏ ஆகிய பிரிவுகளை திரும்பப் பெற்றது. மேலும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் அறிவித்தது.
மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் விமர்சித்தனர், மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துச் செயல்படுகின்றனர். ஆனால், அந்தக் கட்சிக்குள் சில தலைவர்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததைக் கண்டித்து சென்னையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், " ஜம்மு காஷ்மீர் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலமாக இருந்திருந்தால், நிச்சயம் பாஜக இதுபோன்ற சிறப்புச் சலுகைகளை ரத்து செய்திருக்காது. அந்த பிராந்தியத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால்தான் இந்தக் காரியத்தைச் செய்துள்ளது" எனப் பேசினார்.
ப.சிதம்பரத்தின் இந்தக் கருத்துக்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ப.சிதம்பரத்தின் கருத்து பொறுப்பற்றது, வகுப்புவாதத்தைத் தூண்டக்கூடியது என்று சாடினர்.
இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ப.சிதம்பரத்தின் கருத்து என்பது காங்கிரஸ் கட்சியின் விரக்தி, நம்பிக்கையின்மை மற்றும் வழிகாட்டல் இல்லாத அரசியலைத்தான் காட்டுகிறது. கரண் சிங், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மிலிந்த் தியோரோ, ஆர்பிஎன் சிங் உள்ளிட்ட சில தலைவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு மாதிரியாக கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
மறுபுறம் ப.சிதம்பரம், மணி சங்கர் அய்யர் உள்ளிட்டோர் வேறுவிதமாகப் பேசுகிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் வற்றாத குழப்ப நிலையைத் தான் காட்டுகிறது. அவர்கள் ஒருபோதும் நிலையான கொள்கையில், நிலைப்பாட்டில் இருந்ததில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் நேற்று ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 370-வது பிரிவு திரும்பப் பெறப்பட்ட பின், காஷ்மீருக்கு வளர்ச்சி கிடைக்கும். 70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை மக்கள் பெறுவார்கள் என்று நான் கூற முடியும். அதனால்தான் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், ஒருசிலர் ஜம்மு காஷ்மீரில் ஏதேனும் குழப்பம் விளைவிக்க முயல்கிறார்கள்.
மக்கள் ஈகைத் திருநாள் கொண்டாடியதைப் பார்த்தோம். எவ்வாறு அவர்கள் வெளியே வந்து மகிழ்ச்சியாக தொழுகை நடத்திக் கொண்டாடினார்கள். காஷ்மீர் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும். காஷ்மீரை பாலஸ்தீனம் போல் சிலர் பார்க்கிறார்கள்.
அது அவர்களின் எதிர்மறையான கண்ணோட்டம். ப.சிதம்பரம் ஒருவர் மட்டுமே காஷ்மீர் விவகாரத்தை வகுப்புவாதமாக்க முயற்சிக்கிறார். இது மோசமான அரசியல். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருபகுதிதான். அங்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கப்படும்" என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT