Published : 10 Aug 2019 04:30 PM
Last Updated : 10 Aug 2019 04:30 PM
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலப் பெண்கள் குறித்து மோசமாக பேசிய ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக எம்.பி. விஜய் கோயல் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பதேஹாபாத்தில் நேற்று கூட்டத்தில் பேசுகையில், " ஹரியாணாவில் ஆண் - பெண் விகிதாச்சாரம் குறைந்தபோது அமைச்சர் தனகர் ஒரு யோசனை சொன்னார். நாம் ஏன் பிஹாரில் இருந்து மருமகள்களைக் கொண்டுவரக்கூடாது என்றார்.
ஆனால், இப்போது காஷ்மீரில் பெண் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35-ஏ ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், காஷ்மீர் பெண்கள் இனி வெளி மாநிலத்தவரைத் திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்ற நிலை மாறும் " என்று பேசினார்.
இதேபோல பாஜக எம்.பி. விஜய் கோயலும், காஷ்மீர் பெண்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். இருவரின் கருத்தையும் கவனித்த டெல்லி மகளிர் ஆணையம் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், எம்.பி. கோயல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், எம்.பி. விஜய் கோயல் ஆகியோரின் பேச்சும் செயலும், பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்று மட்டுமல்லாமல், காஷ்மீர் மாநில மகள்கள், சகோதரிகளின் மாண்பைக் குலைக்கும் விதமாக இருக்கிறது. உலகில் உள்ள அனைத்துப் பெண்கள், சிறுமிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
காஷ்மீரில் ஏற்கெனவே வன்முறை ஏற்படும் விதமாக இருக்கும்போது, இவர்களின் பேச்சு மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். பெண்கள், சிறுமிகளின் மதிப்பைக் குறைக்கும் வகையில், ஆணாதிக்க சமூகத்தில் சிறுமைப்படுத்தும் வகையில் அரசின் உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் கருத்துகளைக் கூறுகிறார்கள்.
பல்வேறு மாநிலங்கள் உச்சகட்டப் பாதுகாப்பில் இருக்கும்போது, இதுபோன்ற பொறுப்பற்ற, அறிவற்ற கருத்துகளைக் கூறுவது காஷ்மீர் மாநில மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும். இவர்கள் இருவர் மீதும் மாநில எல்லை வரையறையைப் பார்க்காமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். வரும் செப்டம்பர் 14-ம் தேதிக்குள் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT