Published : 06 Aug 2019 06:10 PM
Last Updated : 06 Aug 2019 06:10 PM
புதுடெல்லி,
காஷ்மீர் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்தியஅமைச்சர் முக்தப் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் கட்சிக்கு தலை(மை)யும் இல்லை, இப்போது மூளையும் இல்லாமல் இருக்கிறது என்று பதிலடி கொடுத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்த அரசமைப்புச்சட்டம் 370 பிரிவை நீக்கிய மத்தியஅரசு மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இருபிரிவுகளாகப் பிரித்தது. இதற்கான மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதுதான் சர்ச்சைக்குள்ளானது. அவர் பேசுகையில், " ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விஷயம் என்று சொல்கிறார்கள். கடந்த 1948-ம் ஆண்டில் இருந்து இந்த விஷயத்தை ஐ.நா. கண்காணித்து வருகிறது. சிம்லா ஒப்பந்தம், லாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்படியென்றால் இரு இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சினையா அல்லது உள்நாட்டுப் பிரச்சினையா என்பதை விளக்க வேண்டும் " எனத் தெரிவித்தார்.
இந்த பேச்சைக் கேட்டதும் பாஜக எம்.பிக்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூச்சலிட்டனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அருகே சோனியாவும், சவுத்ரிக்கு பின்னால் ராகுல் காந்தியும், அமர்ந்திருந்தனர். சவுத்ரியின் பேச்சைக்கேட்ட இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.
இதற்கு பதில் அளித்து மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசுகையில், " காஷ்மீர் நமது ஒருங்கினைந்த பகுதி இல்லை என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும், இது நமது உள்நாட்டுப்பிரச்சினை. தோல்வியால் விரக்தி அடைந்து, காங்கிரஸ் கட்சி மூளையின்றி இருக்கிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி இருக்கிறார்கள், இவர் பேசும் போது யாரும் அவரைத் தடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் செய்த தவறுகளை சரிசெய்ய இது வாய்ப்பு, ஆனால், தவறுகள் எனும் கறைகளால் அவை இருளடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தலை(மை)யில்லாமல் இருந்தது, இப்போது மூளையில்லாமல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கை திட்டங்களை வகுப்பவர்கள் தேசிய சிந்தனைக்கு ஏற்றார்போல் மாறாதவரை இந்தபாதையில்தான் செல்வார்கள். காங்கிரஸ் கட்சி கழிவுநீரோடையில் விழுவதை யாராலும் காப்பாற்ற முடியாது.
காங்கிரஸ் கட்சி இப்போது ஹாய், ஹாய் என்றுதான் கூறிவருகிறது, ஆனால், மக்கள் அவர்களுக்கு பை,பை சொல்லிவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட பை,பை(bye) சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சி வரலாற்று பிழை செய்துவிட்டது " எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மாநிலங்களவையில் இருந்து மட்டும் கடந்த ஒரு வாரத்தில் இரு காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அமேதி ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியின் கொறடா புவனேஸ்வர் கலிட்டா ஆகியோர் ராஜினமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...