Last Updated : 06 Aug, 2019 01:47 PM

3  

Published : 06 Aug 2019 01:47 PM
Last Updated : 06 Aug 2019 01:47 PM

காஷ்மீர் விவகாரம்; மவுனம் கலைத்தார் ராகுல் காந்தி: முரண்பட்ட கருத்துகளால் தடுமாறும் காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவு தற்காலிகமாக வழங்கியிருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று அனல் பறக்கும் வாதம் நடந்தபோது கருத்து தெரிவிக்காமல் இருந்த ராகுல் காந்தி தற்போது மவுனம் கலைத்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பல்வேறு சிறப்பு உரிமைகள், அந்தஸ்துகள் வழங்கும் 370 பிரிவு, 35ஏ சேர்க்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், தேசத்தின் முதல் பிரதமராகவும் இருந்த ஜவஹர்லால் நேருவுக்கும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசராகவும் இருந்த ஹரி சிங்குக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடந்தது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய நீரோட்டத்தில், இந்திய ஒருமைப்பாட்டில் காஷ்மீரும் இணைய வேண்டும் என்ற குரல் ஏறக்குறைய 70 ஆண்டுகளாகப் பல்வேறு காலகட்டங்களில் பாஜகவால் எழுப்பப்பட்டு வந்தது.

ரத்து

இந்த சூழலில் மத்தியில் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகள், மற்றும் அந்தஸ்தை ரத்து செய்து அறிவித்தது.

அதற்கான சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். நீண்ட விவாதத்துக்குப் பின் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆதரவு

இந்தத் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் நேற்று கொண்டுவந்தபோது, காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. காங்கிரஸ் எம்.பி.க்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்கள் மத்திய அரசின் முடிவு ஜனநாயகப் படுகொலை என்றும், தேசத்தின் தலையை வெட்டிவிட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் மற்றொரு பிரிவினர் இதை வரவேற்று வருவது அந்தக் கட்சிக்குள் பிளவும், ஒற்றுமையின்மையும், கருத்தொற்றுமையின்மையும் தலைதூக்கி வருவது புலப்பட்டுள்ளது.

ராஜினாமா

இதில் உச்சகட்டமாக, மாநிலங்களவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென காங்கிரஸ் கட்சியின் கொறடா புவனேஸ்வர் காலிட்டா ராஜினாமா செய்து கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.

காங்கிரஸ் கட்சி தற்கொலை முடிவை நோக்கி நகர்கிறது, தேசத்தின் ஒற்றுமைக்காக இனிமேலும் இந்தப் பதவியில் தொடர முடியாது என்று அவர் தெரிவித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இது ஒருபக்கம் நடக்க, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர ஹூடா ஆகியோர் காஷ்மீருக்கான 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி ராஜினாமாவுக்குப் பின் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏராளமான காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினமா செய்து பாஜகவுக்கு மாறியுள்ளனர்.

ராகுலின் செயல்பாடு

இதுபோன்ற காங்கிரஸ் கட்சிக்குள் சரியான தலைமை இல்லாத காரணத்தாலும், நிர்வாகிகளின் கருத்தைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் கடிவாளம் இல்லாததாலும், கட்சியின் அடித்தளமே ஆட்டம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமையான கட்சி தன்னை சூழலுக்கு ஏற்றார்போல் தகவமைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறுவது தெளிவாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களும், பல்வேறு களேபரங்களும் நடந்தபோது, அதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காதது அனைவருக்கும் வியப்பளிக்கும் விஷயமாகும்.

காஷ்மீர் பிரச்சினை கடந்த 70ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் போனதற்கு நேரு காந்தி குடும்பத்தினர் செய்த ஒப்பந்தம்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதை மறுத்துப் பேச முடியாமல், அறிக்கை வெளியிடாமல் காங்கிரஸ் கட்சித் தலைமை இருந்தது வியப்பாக இருந்தது.

கருத்து

இந்த சூழலில்தான் இரு நாட்களுக்குப் பின் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்து மவுனம் கலைத்துள்ளார். இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை துண்டுதுண்டாக ஒருதலைபட்சமாகச் சிதைப்பதாலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைச் சிறையில் அடைப்பதாலும், அரசமைப்புச் சட்டத்தை மீறுவதன் மூலமும் தேச ஒருமைப்பாட்டை அடைய முடியாது.
இந்த தேசம் மக்களால் உருவாக்கப்பட்டது. துண்டு துண்டான நிலங்களால் அல்ல. நிர்வாக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது நமது தேசப் பாதுகாப்புக்கு அபாயகரமான தாக்கங்களை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x