Published : 05 Aug 2019 07:20 AM
Last Updated : 05 Aug 2019 07:20 AM
பாலாசோர்
வானில் உள்ள எதிரியின் இலக்கை, உடனடியாக செயல்பட்டு தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்துக்காக அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ) தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், வானில் வரும் எதிரியின் இலக்கை, உடனடியாக செயல்பட்டு தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை (குயிக் ரியாக் ஷன் சர்பேஸ் டு ஏர் மிசைல் - கியூஆர்எஸ்ஏஎம்) டிஆர்டிஓ தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணை கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி நடத்திய சோதனையும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், 3-வது முறையாக ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே உள்ள சந்திப்பூர் ஏவு தளத்தில் இருந்து நேற்று காலை 11.05 மணிக்கு அதிநவீன ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை ரேடார்களுடனும் மின்னணு சாதனங்களுடனும் இணைந்து செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எல்லா பருவ நிலைகளிலும், மலை, காடு போன்ற எந்தப் பகுதியில் இருந்தும் இந்த ஏவுகணையை செலுத்தி எதிரி இலக்கை அழிக்க முடியும். சுமார் 25 முதல் 30 கி.மீ. தூரம் வரை பறந்து எதிரி இலக்கை தாக்கும். தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் இந்த அதிநவீன ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயா ரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ராணுவத்துக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று டிஆர்டிஓ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT