Published : 04 Aug 2019 06:17 PM
Last Updated : 04 Aug 2019 06:17 PM

சமாஜ்வாதி எம்.பி. ஆஸம் கான் மீது 27 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு

சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. ஆஸம் கான் : கோப்புப்படம்

ராம்பூர்,

சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்தவரும் ராம்பூர் தொகுதி எம்.பி.யுமான ஆஸம் கானுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்தில் 27 முதல் தகவல் அறிக்கைகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

ஆசம் கான் தனது பல்கலைக்கழகத்துக்காக நிலங்களை விவசாயிகளிடம் இருந்து அபகரித்துக்கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அரசில் முதல்வர் அகிலேஷ் யாதவின் அரசில் கேபினட் அமைச்சராக ஆஸம் கான் இருந்தார். அப்போது கடந்த 2006-ம் ஆண்டு முகமது அலி ஜவகர் பல்கலைக்கழகத்தை ஆஸம் கான் தொடங்கி அதன் துணைவேந்தராகவும் செயல்பட்டார். 

மக்களவைத் தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆஸம் கான் வெற்றி பெற்றார். இப்போது பல்கலைக்கழகத்துக்கு நிலத்தை அபகரித்ததாக விவசாயிகள் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராம்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆஜய் பால் சர்மா கூறுகையில், "கடந்த ஜூலை 11-ம் தேதியில் இருந்து 12க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீஸிடம் வந்து ஆஸம் கான் தனது பல்கலைக்கழத்துக்காக தங்களின் நிலத்தை அபகரித்துக்கொண்டதாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆஸம் கான் மீது 27 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 

ஆஸம் கான் மீது ஐபிசி பிரிவு 323, 342, 447, 389, 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் ஆஸம் கான் கைது செய்யப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் " எனத் தெரிவித்தார்.

121 ஹெக்டேரில் அமைந்துள்ள ஆஸம் கானின் முகமது அலி ஜவஹர் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். இதில் 3 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நில அபகரிப்பு வழக்கு தவிர்த்து, பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்கும் பதிவு செய்துள்ளார்கள். அதாவது ராம்பூரில் உள்ள மதராஸா அலியாவில் இருந்து 250 ஆண்டுகள் பழமையான 9 ஆயிரம் புத்தகங்களைத் திருடியதாக பல்கலைக்கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x