Published : 04 Aug 2019 05:03 PM
Last Updated : 04 Aug 2019 05:03 PM

அடுத்த தலைவர் யார்? வரும் 10-ம் தேதி கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 

ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் : கோப்புப்படம்

புதுடெல்லி,

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தபின் பல்வேறு சிக்கல்களை அந்தக் கட்சி சந்தித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்வு செய்வது குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்தபோதிலும், இன்னும் தலைமை முடிவு செய்யாமல் இருப்பது கட்சிக்கு பெரிய பலவீனத்தை ஏற்படுத்தும் என்று மூத்த தலைவர்களான சசி தரூர், கரண்சிங் ஆகியோர் எச்சரித்துள்ளனர். 

ராகுல் காந்தியின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏராளமான காங்கிரஸ்  நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்தும் ஏராளமான தலைவர்கள் விலகி, பாஜகவில் இணைந்து வருவதும் அதிகரித்துள்ளது. 

சமீபத்திதல் அமேதியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் தலைமை ஒரு பூஜ்ஜியம் எனக்கூறி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

அதேபோல மகாராஷ்டிர மாநிலத்திலும், கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலகி பாஜகவிலும், சிவசேனாவிலும் இணைந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாத சூழலில் தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே குழப்பமும், நிர்வாகிகளுக்கு முறையான பதவிகள் குறித்தும் தெரியாததால் கட்சிக்குள் இறுக்கமான சூழல் நிலவுகிறது. 

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ட்விட்டரில் இன்று விடுத்த அறிவிப்பில், "காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி காலை 11 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வது குறித்தும், அடுத்த தலைவர் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸ் கட்சியின் விதிப்படி, தலைமை திடீரென ராஜினாமா செய்தால், அவருக்கு அடுத்தபடியாக மூத்த பொதுச்செயலாளர் கட்சியின் வழக்கமான பணிகளை தலைவர் இடத்தில் இருந்து கவனிப்பார். அதன்பின் செயற்குழு கூடி இடைக்காலத் தலைவர் அல்லது புதிய தலைவரையோ தேர்வு செய்யும்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தவுடன் கட்சியில் இருந்த பல தலைவர்கள் தங்களைப் பொறுப்புகளில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளனர். அவர்களின் இடத்துக்கும் புதிதாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய நிலையில் செயற்குழு இருக்கிறது. 

இதற்கிடையே ராகுல் காந்தியைப் போன்று இளம் தலைவர் ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வர வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளார்கள். பிரியங்கா காந்தி வத்ராவை தலைவராக நியமிக்கும் பேச்சு எழுந்தபோது, தலைவர் பதவிக்கு எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாகத்த தெரிவித்தார். 

இதனால், செயற்குழுக் கூட்டத்தில் தலைவராக யாரைத் தேர்வு செய்யப்போகிறார்கள், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல என்ன திட்டமிடப்போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x