Published : 27 Jul 2019 01:50 PM
Last Updated : 27 Jul 2019 01:50 PM
புதுடெல்லி, பிடிஐ
கடந்த 5ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ பதில் அளித்துப் பேசுகையில் "கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை நாட்டில் 1.09 கோடி மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 2018-19ம் ஆண்டில் 26.19 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் இந்த மரங்களை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
காட்டுத் தீ மூலம் எரிந்த மரங்கள் குறித்த புள்ளிவிவரங்களும், வெட்டப்பட்ட மரங்கள் குறித்த விவரங்களும் அமைச்சகத்திடம் இல்லை. கடந்த 2014-15-ம் ஆண்டில் 23.30 லட்சம் மரங்களும், 2015-16ம் ஆண்டில் 16.90 லட்சம் மரங்களும், 2016-17ம் ஆண்டில் 17.01 லட்சம் மரங்களும் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டன. 2017-18ம் ஆண்டில் 25.50 லட்சம் மரங்களும் வெட்ட அனுமதி தரப்பட்டன.
பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் காடு வளர்ப்புக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.237.07 கோடி வழங்கப்பட்டுள்ளது. 87 ஆயிரத்து 113.86 ஹெக்டேர் நிலத்தில் காடு வளர்க்க நிதி ஒதுக்கப்பட்டது. காட்டில் மரங்களை வெட்டக்கூடாது என்பதற்காக 56 ஆயிரத்து 319 வீடுகளுக்கு மாற்று எரிபொருளும் வழங்கப்பட்டது.
இதுதவிர கடந்த 4 ஆண்டுகளி்ல தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய இடங்களில் காடு வளர்ப்புக்காக ரூ.328.90 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 94 ஆயிரத்து 828 ஹெக்டேரில் காடு வளர்க்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது " எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவின் ட்விட்டர் பதிவில், " மரங்கள்தான் நமக்கு வாழ்வை தருபவை. மரங்கள்தான் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்பவை. கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு மனிதர்களுக்கு ஆக்ஸிஜனை மரங்கள்தான் வழங்கி, சூழலை பாதுகாக்கின்றன. ஆனால், மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடியே 9 லட்சத்து 75 ஆயிரத்து 844 மரங்களை வெட்ட அனுமதி அளித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT