Published : 25 Jul 2019 07:20 PM
Last Updated : 25 Jul 2019 07:20 PM

கர்நாடகா வழக்கு: மூத்த வழக்கறிஞர்களை விமர்சித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி:

கர்நாடகா அரசியல் நெருக்கடி வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மூத்த வழக்கறிஞர்களை விமர்சனம் செய்தார். 

அதாவது அவசர விசாரணைக்காக நள்ளிரவில் கூட உச்ச நீதிமன்றத்தை எழுப்பும் மூத்த வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்குத் தேவைப்படும் போது ஆஜராவதில்லை, என்று ரஞ்சன் கோகய் விமர்சனம் வைத்தார். 

அதாவது ஜூலை 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்ததை வைத்து அவர் இந்த விமர்சனங்களை முன் வைத்தார். அதாவது இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதமின்றி நடத்த உத்தரவிடக்கோரி செய்த மனு தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் தற்போது தேவையற்றது ஏனெனில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டது எனவே அதை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரினார். 

இதனையடுத்தே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், இந்த வழக்கில் முழுதும் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரொஹாத்கி, ஏ.எம்.சிங்வி போன்றோர் கூட இந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மனுக்களை வாபஸ் பெற கோர்ட்டை அணுகவில்லையே இது ஏன்? உச்ச நீதிமன்ற அமர்வு இத்தனைக்கும் இவர்கள் வாதங்களை பொறுமையுடன் கேட்டு இடைக்கால உத்தரவுகளை இந்த வழக்கில் பிறப்பித்துக் கொண்டேதான் இருந்தது என்று கூறிய கோகய்.

“உங்களுக்கு அவசர விசாரணை தேவை என்றால் பகலென்றும் பாராமல் இரவென்றும் பாராமல் நள்ளிரவில் கூட கோர்ட் கதவை தட்டுகிறீர்கள். ஆனால் கோர்ட்டுக்குத் தேவைப்படும் போது நீங்கள் ஆஜராக விரும்புவதில்லை” என்று வேதனை தெரிவித்தார். 

கோகய் குறிப்பிட்ட நள்ளிரவு விசாரனை 2018-ம் ஆண்டினுடையது. அந்த விசாரணைதான் கர்நாடகாவில் ஒரு வாக்கெடுப்பை நடத்தவும் குமாரசாமி முதல்வராகவும் வழிவகுத்த நள்ளிரவு விசாரனை ஆகும்.

கர்நாடகா சபாநாயகரைப் பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, ஜூலை 25ம் தேதி ஆஜராகி பின்னால் நாள் முடிவில் வருகிறேன் என்று கூறிவிட்டு வேறொரு வழக்கு தொடர்பாக சென்று விட்டார். ரொஹாத்கியும் கோர்ட்டில் இல்லை. 

இந்நிலையில் ரஞ்சன் கோகயின் விமர்சனம் குறித்து மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண், “மை லார்ட் நம்மை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டார்” என்றார். ஆனால் இதற்கு உறுதியுடன் பதிலளித்த தலைமை நீதிபதி, “ஆம்! இது தர்ம சங்கடம் ஏற்படுத்தத்தான்” என்றார். 

கடைசியில் அந்த மனுவை வாபஸ் பெற கோர்ட் அனுமதித்தது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x