Published : 07 Jul 2015 03:57 PM
Last Updated : 07 Jul 2015 03:57 PM
காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தது பாலஸ்தீனத்தில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அத்னான் அபு அல்ஹைஜா அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஐ.நா. தீர்மானம் குறித்து பாலஸ்தீன தலைவர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக வாக்களிக்க மறுத்தது எங்கள் மகிழ்ச்சியை உடைத்தது.
எங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு சிறப்பான இடம் உண்டு. எனவே இந்தியா வாக்களிப்பிலிருந்து விலகியது இந்தியா அதன் மரபான நிலைப்பாட்டிலிருந்தும், கொள்கையிலிருந்தும் விலகியுள்ளதாகவே எங்களுக்கு தெரிகிறது. பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு 70 ஆண்டுகளாக மாறாமல் இருந்தது.
இந்திய-பாலஸ்தீன உறவுகள் காலனியாதிக்கத்துக்கு எதிரான பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வில் நட்புறவாக இருந்து வந்தது. அதிகாரத்தில் என்ன அரசியல் பண்புகள் இருந்தாலும் பாலஸ்தீனத்துடனான இந்திய உறவு பலமாகவே இருந்தது.
இஸ்ரேலுடனான இந்தியாவின் ராணுவ உறவுகள் குறித்து நாங்கள் எங்கள் கவலைகளை வெளியிட்டு வந்தாலும், பாலஸ்தீனம் குறித்த தங்கள் நிலைப்பாடு மாறாது என்று இந்தியா எப்போதும் உத்தரவாதம் அளித்து வந்தது. தற்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வாக்கெடுப்பிலிருந்து விலகியதன் மூலம் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் மாறாத அடிப்படையான அணி சாராத் தன்மை தற்போது அதனிடமிருந்து விடைபெற்றுள்ளது” என்றார்.
ஐ.நா. வாக்கெடுப்புக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்தது பற்றி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இது குறித்து பாலஸ்தீன தூதர் அல்ஹைஜா கூறும்போது, “இந்தியா விலகியது சிறிய பாதைவிலகலாகவே நாங்கள் கருதுகிறோம். இது உலகின் அடக்கப்பட்ட மக்களுக்கான இந்தியா அளித்து வரும் இத்தனையாண்டு கால ராஜீய வரலாற்றை இப்போதைய இந்திய விலகல் பிரதிபலிக்கவில்லை என்றே இன்னும் நம்புகிறோம். இது ஒரு முறை நிகழும் நிகழ்வே, இந்தியாவின் இந்த நிலைப்பாடு நிரந்தரமல்ல என்றே நம்புகிறோம்.
மேலும், மோடி, பாலஸ்தீனத்துக்கு 2016- தொடக்கத்திலோ, இந்த ஆண்டின் இறுதியிலோ வருவார் என்று எதிர்பார்க்கிறோம். எனவே அவர் நேரில் வரும்போது இங்குள்ள சூழ்நிலைகள் அவருக்கு விளங்கும்'' என்று கருதுவதாக அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT