Published : 23 Jul 2019 11:33 AM
Last Updated : 23 Jul 2019 11:33 AM
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனக் கூறியுள்ள ட்ரம்ப் தான் என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே பேசுகிறார் என விமர்சித்துள்ளார் முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் திருவனந்தபுர எம்.பி.யுமான சசி தரூர்.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், "இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நான் பிரதமர் மோடியைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், நீங்கள் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறார்களா? எனக் கேட்டார். நான் எங்கு என்றேன். அவர் அதற்கு காஷ்மீர் என்றார். என்னால் முடியுமென்றால் நான் நிச்சயமாக மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றேன். நான் ஏதாவது விதத்தில் உதவியாக இருக்க இயலுமென்றால் என்னிடம் தெரிவியுங்கள் எனக் கூறினேன்" என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், "தான் என்ன பேசுகிறோம் என்று அறியாமலேயே பேசுகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஒருவேளை காஷ்மீர் பிரச்சினையின் ஆழம் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். இல்லையேல் அவருக்கு யாரும் அது குறித்து விவரிக்காமல் விட்டிருக்கலாம்.
மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டைக் கோரியிருப்பார் என்பது சாத்தியமற்றது. ஏனெனில் நமது வெளியுறவுக் கொள்கை மிகமிகத் தெளிவாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையீட்டை நம் கொள்கை ஊக்குவிக்கவே இல்லை.
இருநாடுகளுக்கும் இடையே மொழிப்பிரச்சினைகூட கிடையாது. அதனால், பாகிஸ்தானுடன் பேச வேண்டுமானால் நாம் நேரடியாகவே பேசிக் கொள்வோமே. எதற்காக மத்தியஸ்தம் கோரப் போகிறோம். மேலும் ட்ரம்ப்புடன் இம்ரான் கான் பேசும் வீடியோவைப் பார்த்தால் தெளிவாகப் புரியும். அவர்தான் முதலில் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் தேவை என்ற பேச்சைத் தொடங்குகிறார்" எனக் கூறிச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT