Published : 21 Jul 2019 01:43 PM
Last Updated : 21 Jul 2019 01:43 PM

இந்தியாவில் மேலும் ஒரு ஆண்டு தங்குவதற்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு அனுமதி

வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் :கோப்புப்படம்

 

 

புதுடெல்லி, பிடிஐ

 

வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் மேலும் ஓர் ஆண்டு தங்கிக்கொள்ள அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததாகக் குற்றம்சாட்டி வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தஸ்லிமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

 

இதனால், கடந்த 1994-ம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய தஸ்லிமா நஸ்ரின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்ற தஸ்லிமா நஸ்ரின் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார்.

 

கொல்கத்தாவில் நீண்டகாலமாக தஸ்லிமா நஸ்ரின் வாழ்ந்தநிலையில், அவருக்கு எதிராக அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தியதால், அங்கிருந்து வெளியே டெல்லியில் வசித்து வருகிறார்.

 

இந்தியாவில் தனக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்று பலமுறை தஸ்லிமா நஸ்ரின் முந்தைய காங்கிரஸ், பாஜக அரசிடம் கோரிக்கை வைத்தும் அவருக்கு குடியுரிமை வழங்காமல், தங்கிக்கொள்வதற்கு தற்காலிகமான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

 

56 வயதான தஸ்லிமா நஸ்ரினுக்கு கடந்த வாரம் கூடுதலாக 3 மாதம் இந்தியாவில் தங்கிக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில், இப்போது கூடுதலாக ஒரு ஆண்டு தங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, 2020-ம் ஆண்டு ஜூலைவரை தஸ்லிமா இந்தியாவில் தங்கிக்கொள்ள முடியும்.

 

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ட்விட்டரில் தஸ்லிமா நஸ்ரின் கோரிக்கை விடுத்திருந்தார். அதில் " மரியாதைக்குரிய அமித் ஷா, நான் இந்தியாவில் தங்குவதற்கு 3 மாதம் அவகாசம் அளித்தமைக்கு நன்றி. நான் இதற்கு முன் 5 ஆண்டுகள் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டபோது, எனக்கு ஒரு ஆண்டு மட்டுமே கிடைத்தது. ராஜ்நாத் சிங் எனக்கு 50 ஆண்டுகள் அனுமதி அளிப்பதாக உறுதியளித்தார். இந்தியா மட்டுமே எனக்கு தாய்வீடு. என்னை சிக்கலில் இருந்து மீட்பீர்கள் என நம்புகிறேன். இந்த முறை எனக்கு 3 மாதங்கள் மட்டுமே தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு ஆண்டாக உயர்த்த வேண்டும் " என கடந்த 17-ம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இப்போது தஸ்லிமா நஸ்ரினுக்கு ஒரு ஆண்டு தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டரில் நஸ்ரின் கூறுகையில் " ட்விட்டர் மிகவும் சக்திவாய்ந்தது. எனக்கு தங்கும் அனுமதி நீட்டிக்கப்படவில்லையே எனக் கேட்டு ஜூலை 16-ம் தேதி ட்விட்டரில் கேட்டிருந்தேன், அதை 3 மாதம் நீட்டித்து 17-ம் தேதி இந்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், ட்விட்டரில் உள்ள ஏராளமான நண்பர்கள் எனக்கு நீண்டநாட்கள் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கக் கோரி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்கள். இந்த வேண்டுகோளுக்கு இணங்க, எனக்கு ஒரு ஆண்டு இந்தியாவில் தங்கிக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளமைக்கு நன்றி  தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், " தஸ்லிமா நஸ்ரின் பலமுறை இந்தியாவில் நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x