

பாரபங்கி
உத்தர பிரதேச மாநிலத்தில் கேட்ட வரதட்சணை தரவில்லை என்பதால் மனைவியை திருமணம் செய்த 24 மணிநேரத்தில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி அருகே ஜஹாங்கிர்பாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகே ஆலம். இவருக்கு கடந்த 13-ம் தேதி ருக்ஷனா பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
திருமண வரதட்சணையாக மணமகனுக்கு மோட்டர் பைக்கை வாங்கி தருவதாக பெண் வீட்டார் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூறியபடி வாங்கி தரவில்லை.
இதையடுத்து திருமணம் நடந்த 24 மணிநேரத்துக்குள்ளாக ஷா ஆலம் முத்தலாக் கூறி தனது மனைவியை விவகாரத்து செய்துள்ளார். இதையடுத்து ருக்ஷனா பானுவின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் ஷா ஆலம் உட்பட மணமகன் வீட்டைச் சேர்ந்த 12 பேர் மீதும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் தோமர் கூறுகையில் ‘‘மணமகன் ஷா ஆலம் மற்றும் அவரது உறவினர்கள் மீது மணமகளின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த பதேபூர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறினார்.