Published : 16 Jul 2015 10:58 AM
Last Updated : 16 Jul 2015 10:58 AM
ஜம்முவில் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "இன்று காலை முதலே எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அப்தூலியன், டியூப்வெல் எண் 5, காத்மரியானா, கோரோடானா, சங்ரால் ஆகிய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இத்தாக்குதலில் உயிரிழப்பு ஏதுமில்லை இருப்பினும் 4 பேர் காயமடைந்தனர்" என்றார்.
எல்லையில் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது இம்மாதத்தில் இது 9-வது முறையாகும்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் நிதியமைச்சர் கிர்தாரி லால் டோக்ராவின் நூற்றாண்டு விழா ஜம்முவில் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் பிரதமரின் ஜம்மு பயணத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
முன்னதாக நேற்று, ஜம்மு மாவட்டம், அக்னூர் தாலுகா, கனாசாக் பகுதியில் நேற்று காலை 8.45 மணியளவில், சர்வதேச எல்லையில் உள்ள இந்திய சாவடியை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பிஎஸ்எப் காவலர் அஞ்சலி குமார் காயமடைந்தார்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பிஎஸ்எப் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இதையடுத்து அங்கு இருதரப்பு மோதல் தொடங்கியது. காயமடைந்த வீரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கனாசாக் பகுதியில் பாகிஸ்தான் வீசிய 3 பீரங்கி குண்டுகள் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்தன. இதில் பாலி தேவி (42) என்ற பெண் உயிரிழந்தார். மேலும் ரமேஷ்குமார் (24), உதா தேவி (38) ஆகிய இருவர் காயம் அடைந்தனர்.
நேற்றைய தாக்குதலை பாகிஸ்தானின் `21 சீனாப் சுற்றுக்காவல் படை’ நடத்தியதாக தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT