Published : 22 Jul 2015 08:49 AM
Last Updated : 22 Jul 2015 08:49 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 1 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பருவமழை தொடங்கியுள்ளது. மும்பையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று மிகவும் பாதிக்கப்பட்டது.
மும்பை மற்றும் சுற்றுப் பகுதி களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கன மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் நேற்று காலை முதல் வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
மும்பை புறநகர் ரயில் சேவையில் மேற்கு மும்பை, மத்திய மும்பை மற்றும் துறைமுக வழித்தடங்களில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
நகரில் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது, மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியது.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதே விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் சுமார் 15 நிமிடம் வரை கால தாமதம் ஆனது. என்றாலும் விமான சேவை ரத்து செய்யப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரத்தில் மும்பை தவிர சிந்துதுர்க், ரத்தினகிரி, ராய்காட், தானே, பல்கார் ஆகிய கடலோர மாவட்டங்கள் மற்றும் நாசிக், புனே, அகமது நகர் ஆகிய உட்புற மாவட்டங்களிலும் கன மழை பெய்தது.
இப்பகுதிகளிலும் ரயில் சேவை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT