Published : 10 Jul 2015 02:13 PM
Last Updated : 10 Jul 2015 02:13 PM
மகாராஷ்டிராவில், சாலையில் சென்ற குழந்தை மீது கார் ஒன்று ஏறி இறங்கியது. காரின் முன்புற, பின்புற சக்கரங்கள் ஏறி இறங்கிய அந்தக் குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்தது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஜோயா. ஜோயா தனது வீட்டின் வெளியே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த கார் அவர் மீது ஏறி இறங்கியது. குழந்தையின் மீது காரின் முன் சக்கரம் மற்றும் பின்சக்கரம் ஏறி இறங்கியது.
அங்கிருந்தவர்கள் குழந்தை விபத்துக்குள்ளானதை கண்டு, விபத்து ஏற்படுத்திய காரிலேயே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக ஜோயாவின் உயிருக்கும் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். முழு உடல் பரிசோதையில் குழந்தையின் நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் மட்டும் மிக லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்காக இரு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜோயா தற்போது நலமுடன் வீடு திரும்பியது அவரது பெற்றோரை நிம்மதியடையச் செய்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவம், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியான நிலையில், விபத்து நடந்த காட்சிகள் காணும் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
ஆனால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஆபத்தான விபத்தை கடந்து வந்துள்ள ஜோயாவை அந்தப் பகுதி மக்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT