Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

ஒரே நபரிடம் எல்லா அதிகாரத்தையும் ஒப்படைக்கப் பார்க்கிறது பாஜக: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தாக்கு

நாட்டு மக்கள் அனைவருக்குமே அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது. ஆனால், பாஜகவோ ஒரே ஒரு நபரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:

ஒரே ஒரு நபரிடம் (பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு) அதிகாரத்தை ஒப்படைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை விரட்டி அடித்தது போல் பா.ஜ.க.வை காங்கிரஸ் அப்புறப்படுத்தும். கோடிக்கணக்கான மக்களே இந்த நாட்டை இயக்குகிறார்கள். பொதுமக்கள் அனைவருக்கும் அதிகாரம் வழங்கும் முனைப்புடன் காங்கிரஸ் செயல்படுகிறது.

இந்துக்கள் என்று தங்களை அழைக்கும் பாஜக தலைவர்கள் பகவத் கீதையை படித்ததில்லை. அதைத் திறந்து பார்த்திருந்தால் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல, சித்தாந்தம் என்பது புரிந்திருக்கும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இந்தியாவிலிருந்து விரட்டி அடித்தது காங்கிரஸ் அல்ல. அதன் சித்தாந்தங்கள். பிரிட்டிஷாரை எப்படி வெளியேற்றினோமோ அதே பாணியில் பாஜகவையும் விரட்டி அடிப்போம்.

குஜராத்தில் ஆட்சி புரிபவரின் அமைச்சரவையில் 3 ஊழல் அமைச்சர்கள் உள்ளனர். அதுபற்றி அந்த தலைவருக்கு தெரியவில்லை. ஊழல் பற்றி விமர்சித்துப் பேசும் பாஜக தலைவர்களுக்கு கர்நாடகத்தில் அவர்களது முதல்வர் சிறையில் அடைக்கப்பட்டபோது ஊழல் கண்ணுக்குத் தெரியவில்லை. ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை முடக்க முயற்சித்ததே பாஜகதான்.

ஒரு தலைவர் என்றால் மக்களை அணுகி அவர்களது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதாகும். கூட்டத்துக்கு வருவது, உரையாற்றுவது, பேசி முடித்ததும் வீடு திரும்புவது என்பது தலைவர் என்பவருக்கு அழகல்ல.

மக்களை எட்டிப்பார்க்காமல் மாற்றத்தை ஒரு தலைவரால் கொண்டுவர முடியாது. சட்டப் பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் போதிய எண்ணிக்கையில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று பெண்கள் கூறுகிறார்கள். பெண்களும் உழைக்கும் வர்க்கத்தினருமே நாட்டின் முதுகெலும்பாக திகழ்பவர்கள். அவர்களின் நலனில் காங்கிரஸ் முழு கவனம் செலுத்தும் என்றார் ராகுல் காந்தி.

பழங்குடி இளைஞர்களுடன் கலந்துரையாடல்

மகாராஷ்டிர மாநிலம் ஷிர்பூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பழங்குடி இளைஞர்களுடன் கலந்துரையாடியபோது ராகுல் கூறியதாவது:

நான் பிரதமர் பதவிக்கு வருவேனா மாட்டேனா என்பது முக்கியமல்ல. இந்தியர்கள் அனைவரும் இந்த நாடு நமது நாடு என்கிற உணர்வை பெறுவதுதான் எனது எதிர்பார்ப்பு.

சொந்த நாட்டைக்கண்டு பீதியில் அஞ்சுவதாக ஒரு இளைஞர் கூட சொல்லக்கூடாது. இளைஞர்கள் அரசியலில் விருப்பத்துடன் இறங்க வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகளில் உங்களில் இருந்து எம்எல்ஏ, எம்எல்சி, எம்பிக்கள், பிரதமர் வர வேண்டும் என்பதே எனது கனவு. நமது நாட்டு இளைஞர்களிடம் உள்ள திறமையும் செயலாற்றலும் வேறு எங்கும் காணமுடியாது. இந்தியாவில் ஏராளமான செல்வந்தர்கள் உருவாகி இருக்கிறார்கள். இது நாட்டின் முன்னேற்றத்தை காட்டுகிறது என்றார் ராகுல் காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x