Published : 27 Jul 2015 09:13 AM
Last Updated : 27 Jul 2015 09:13 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்தார். அவர் கடந்த மே 11-ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனுவை கர்நாடக அரசு கடந்த மாதம் 23-ம் தேதி தாக்கல் செய்தது. அதில், சொத்து விவரங்களை கணக்கிட்டதில் தவறு நடந்துள்ளது என்றும் கர்நாடக அரசின் வாதம் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. மனுவில் உள்ள சில தவறுகளை சுட்டிக் காட்டியதன் பேரில் அந்த மனு வாபஸ் பெறப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழ கனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
2300 பக்கங்களில்...
மொத்தம் எட்டு புத்தகங்களாக 2300 பக்கங்களில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்தும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த அமர்வு முன்பாக 27-வது வழக்காக இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா முதல்வராகவும் பொறுப்பேற்று விட்டார். இந்நிலையில், அவரது விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தொடரப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT