Published : 11 Jan 2014 12:31 PM Last Updated : 11 Jan 2014 12:31 PM
ஜனதா தர்பார்: பாதியில் வெளியேறிய கேஜ்ரிவால்- 50 ஆயிரம் பேர் குவிந்ததால் கூச்சல், குழப்பம்
டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் முகாமில் சுமார் 50 ஆயிரம் பேர் குவிந்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதனால், குறைகளைக் கேட்க வந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பாதியிலேயே வெளியேறினார்.
டெல்லி தலைமைச் செயலக வளாகத்தில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்நிலையில், புகார்களைப் பெறுவதற்காக கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த மூங்கில் தடுப்புகளை உடைத்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு கேஜ்ரிவாலை நெருங்க முயன்றனர். இதனால் அவரை போலீசார் பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்த அவர், பொதுமக்களின் குறைகளைக் கேட்டார். ஒரு கட்டத்தில் முண்டியடித்த கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
அப்போது அவர் மக்களிடம் கூறுகையில், "இவ்வளவு கூட்டம் வரும் என நான் எதிர்பார்க்க வில்லை. இதனால், முறையான ஏற்பாடுகள் செய்ய இயலாமைக்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மக்கள் தர்பாரை மற்றொரு நாளில் முறையான ஏற்பாடுகளுடன் நடத்துவேன்" என அறிவித்த அவர், ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து வெளியேறினார்.
50 ஆயிரம் பேர் குவிந்தனர்...
ஜனதா தர்பார் நிகழ்ச்சியை முன்னிட்டு சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக, 'சாஸ்திரா சீமா பல்' படையைச் சேர்ந்த 500 வீரர்கள் மற்றும் டெல்லி போலீஸார் 500 பேர்கள் மட்டுமே இருந்தனர். சில ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதை இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.
இது குறித்து கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், "இவ் வளவு பொதுமக்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்து நான் வெளியேறாமல் இருந்திருந்தால் நெரிசல் ஏற்பட்டு அசாம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்" என்றார்.
குறைகளைக் கூற வந்தவர் களுடன் கேஜ்ரிவாலை பார்த்து பாராட்டுவதற்காகவும் ஏராளமானோர் வந்திருந்ததே நெரிசலுக்குக் காரணம் என கூறப்படுகிறது. இதுதவிர, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றுபவர்கள் மற்றும் பணிகளை இழந்தவர்களும் வந்திருந்தனர்.
WRITE A COMMENT