Published : 12 Jul 2015 12:01 PM
Last Updated : 12 Jul 2015 12:01 PM
உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. தற்போதைய புள்ளிவிவரத்தின்படி இந்தியர்களின் எண்ணிக்கை 127,42,34,538 ஆக உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 17.23 சதவீதம் ஆகும்.
ஐ.நா. சபை சார்பில் கடந்த 1989 ஜூலை 11-ம் தேதி முதல்முறையாக உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று பிற்பகல் 2.30 மணி வரையிலான புள்ளிவிவரத்தின்படி இந்தியர்களின் எண்ணிக்கை 127 கோடியே 42 லட்சத்து 34 ஆயிரத்து 538 ஆக உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 17.23 சதவீதம் ஆகும்.
இதேநிலை நீடித்தால் வரும் 2028-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று சர்வதேச நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தொண்டு நிறுவனங்கள்
உலக மக்கள் தொகை தினம் உலகெங்கும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மேலும் கூறியதாவது:
எவ்வளவுதான் நடைமுறைகள் இருந்தாலும் அரசு மட்டுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாது. இதில் தொண்டு நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. அவர்களுடைய செயல்பாடுகள் மூலம் மக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை கொண்டு செல்ல முடியும்.
நாட்டில் 36 மாநிலங்களில் 24 மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை அதிகரிக்கும் சதவீதம் குறைந்துள்ளது.
1952-ம் ஆண்டு நாம் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கினோம். இன்று அது நமக்குப் பலன் தருகிறது. மக்கள் தொகைதான் இந்தியாவின் பலமும் பலவீனமும் ஆகும். எனினும், இங்கு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது மிக முக்கியமான பலம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT