Last Updated : 07 May, 2014 08:54 AM

 

Published : 07 May 2014 08:54 AM
Last Updated : 07 May 2014 08:54 AM

நிதிஷ்குமார் மீது கட்சியில் அதிருப்தி: ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவா?

பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ் குமாரை சமீப காலமாக அவரது கட்சியினரே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு ஏற்படும் சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கடந்த வாரம் முஸாபர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, “ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரால், தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தினரின் வாக்குகளை மட்டுமே பெற முடிகிறது. அதைத் தாண்டி பிற சமூகத்தினரின் ஆதரவைப் பெற முடியவில்லை” என்றார்.

தனது கட்சியின் முதல்வரை சரத் யாதவ் விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிதிஷ் குமார் பெயரை வாய்தவறி கூறிவிட்டதாக சரத் யாதவ் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளச் செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், “உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக எங்கள் கட்சியின் தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்” என்றார்.

இதற்கு சரத் யாதவுக்கு நெருக்கமானவரான அக்கட்சி யின் மூத்த தலைவர் வசிஷ்ட் நாராயண்சிங் மறுப்பு தெரிவித் தார். அவர் கூறுகையில், “எங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிஹார் மாநிலத்தில் பிரச்சாரம் செய்வதற்கே மூத்த தலைவர்களுக்கு நேரமில்லை. இந்நிலையில், வாரணாசியில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய யாரும் முன்வர மாட்டார்கள்” என்றார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத நிதிஷ் குமார், வாரணாசியில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்ட சிவானந்த் திவாரி கூறுகையில், ‘இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 17 ஆண்டுகளாக அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், தனது உறவை கடந்த ஆண்டு முறித்துக் கொண்டது. பாஜகவில் பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லாததால், அக் கூட்டணியிலிருந்து வெளியேறு வதாக நிதிஷ் குமார் அப்போது காரணம் தெரிவித்தார். ஆனால், இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலேயே, பாஜக வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதற்கு சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கட்சியில் பிளவு?

இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பாஜகவுடனான கூட்டணி முறிந்தால் ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என சரத்யாதவ் கருதினார். அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவைத் தேர்தலில், பிஹாரில் காலியாகவிருந்த இடத்தில் போட்டியிட்டு நாடாளு மன்றம் செல்ல விரும்பினார். ஆனால், அதை கட்சி ஏற்கவில்லை. அதன் காரணமாக சரத் யாதவ் அதிருப்தியில் உள்ளார்” என்றனர். மக்களவைத் தேர்தலில் பிஹாரின் மாதேபுரா தொகுதியில் சரத் யாதவை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி வேட்பாளர் பப்பு யாதவ் போட்டியிடுகிறார்.

இதற்கிடையே, சரத் யாதவின் ஆதரவாளர்களான பிஹார் மாநில அமைச்சர்கள் பிரிஷன் படேல் மற்றும் நரேந்தர்சிங் ஆகியோர் நிதிஷ் குமாரை மறை முகமாக விமர்சனம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

நிதிஷ் குமார் மீது அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலை வர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருவதால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிஹார் சட்டமன்றத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது. தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க் களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறும் சரத் யாதவ், பாஜகவிற்கு ஆதரவளிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x