Last Updated : 01 Jul, 2015 12:23 PM

 

Published : 01 Jul 2015 12:23 PM
Last Updated : 01 Jul 2015 12:23 PM

புது பகீர் ட்வீட்: லலித் மோடியிடம் சிக்கிய வருண் காந்தி

"சில வருடங்களுக்கு முன்னர் லண்டனில் என்னை சந்தித்த பாஜக எம்.பி. வருண் காந்தி, எல்லா பிரச்சினைகளையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேசி தீர்த்துக்கொள்ளுமாறு கூறினார்" எனத் தெரிவித்துள்ளார் லலித்மோடி.

தான் போர்ச்சுகல் செல்ல விசா பெறுவதற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும்தான் உதவினார்கள் என லலித் மோடி கூறியதன் விளைவுகளே இன்னும் சரி செய்யப்படவில்லை.

அதற்குள் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் லலித்மோடி.

நேற்றிரவு அவர் பதிவு செய்த ட்வீட்டில், "@varungandhi80 என்னை சந்திப்பதற்காக என் வீட்டிற்கு வந்தார். என்னுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் தலைவரும் தனது சித்தியுமான சோனியா காந்தியிடம் பேசி தீர்வு காணலாம் என்று கூறினார்" என பதிந்துள்ளார்.

மேலும் அவரது மற்றொரு ட்வீட்டில் "இத்தாலியில் இருக்கும் சோனியாவின் சகோதரியை சந்திக்குமாறும் வருண் காந்தி என்னிடம் கூறினார். ஆனால், அந்தப் பெண் 60 மில்லியன் டாலர் எதிர்பார்த்தார். அவர்கள் கோரிக்கை பைத்தியக்காரத்தனமாக இருந்தது. இதை வருண் காந்தியால் மறுக்க முடியுமா?" எனப் பதிந்துள்ளார்.

மூன்றாவதாக பதிந்த ட்விட்டில், "தெளிவுப்படுத்தலுக்காக கூறுகிறேன், வருண் காந்தி குறிப்பிட்டிருந்த பெண்கள் சோனியா காந்தியும், அவரது சகோதரியும்" எனக் கூறியுள்ளார்.

அதோடு நிற்கவில்லை லலித்மோடி, "வருண்காந்தி நீங்கள் லண்டனில் ரிட்ஸ் விடுதியில் தங்கியிருந்தபோது என் வீட்டுக்கு வந்தீர்களா இல்லையா?" என ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார்.

விசா விவகாரம் வலுவானதைத் தொடர்ந்து, அவ்வப்போது பாஜக, காங்கிரஸ் மேலிட பிரமுகர்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தையொட்டி லலித் மோடி ட்விட்டரில் பதிவு செய்து வருவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x