Published : 31 Mar 2014 12:00 AM
Last Updated : 31 Mar 2014 12:00 AM

பாஜக கூட்டணிக்கு – 233; காங். கூட்டணிக்கு- 119: கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு

வரும் மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 119 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏபிபீ நியூஸ், ஏ.சி. நீல்சன் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

அதிமுகவுக்கு 21 இடங்கள்

பாஜக 209 தொகுதிகளிலும் காங்கிரஸ் 91 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மாநில கட்சிகளில் திரிணமூல் காங்கிரஸ் 28 இடங்களிலும் இடதுசாரிகள் 23 இடங்களிலும் அதிமுக 21 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 18 இடங்களிலும் பிஜு ஜனதா தளம் 17 இடங்களிலும் வெற்றி பெறும்.

மேற்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்து உள்ளது. அந்த மாநிலங்களில் மொத்தமுள்ள 116 தொகுதிகளில் 86 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். இதேபோல வடக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 151 இடங்களில் 87 இடங்களில் பாஜக வெற்றிபெறும்.

தென்மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்

தென் மாநிலங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சிறிது செல்வாக்கு உள்ளது. இந்த மாநிலங்களில் மொத்தமுள்ள 134 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களிலும் பாஜக கூட்டணி 21 இடங்களிலும் வெற்றிபெறும். இரு கூட்டணிகளையும் சாராத மாநிலக் கட்சிகள் தென் மாநிலங்களில் அதிகபட்சமாக சுமார் 79 தொகுதிகளைக் கைப்பற்றக்கூடும்.

கிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 142 தொகுதிகளில் மாநிலக் கட்சிகள் 71 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 39 இடங் களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 32 இடங்களும் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 119 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மோடி பிரதமராக 54% பேர் ஆதரவு

நரேந்திர மோடி பிரதமராக 54 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 18 சதவீதம் பேரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்குக்கு தலா 5 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 4 சதவீதம் பேரும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கு தலா 3 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x