Last Updated : 24 Jul, 2015 06:17 PM

 

Published : 24 Jul 2015 06:17 PM
Last Updated : 24 Jul 2015 06:17 PM

குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைக்க மகாராஷ்டிர அரசு நடவடிக்கை

பள்ளிச் சிறுவர், சிறுமியர் பாடப் புத்தகம் என்ற பெயரில் அளவுக்கு மீறி சுமப்பதை நிறுத்த மகாராஷ்டிர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உலகெங்கிலும் சிறுவர் சிறுமியர் பாடப் புத்தக பொதி சுமப்பது ஒரு பொதுவான காட்சியாக பல ஆண்டுகள் இருந்து வந்தாலும், இந்த அரசும் இதனைக் கண்டு கொள்ளாமலே இருந்து வரும் நிலையில், மகாராஷ்டிர அரசு இதற்கு முடிவு கட்ட முனைந்துள்ளது.

அதாவது சிறுவர்-சிறுமியரின் உடல் எடைக்கு 10%க்கு அதிகமாக பள்ளிப் பாடப் புத்தகச் சுமை இருக்கக் கூடாது என்று மகாராஷ்டிர மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

1-ம் வகுப்பில் படிக்கும் 5 வயது மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு வரும்போது அவர்கள் புத்தகப்பையின் எடை 2.5 கிலோவுக்கு கூடுதலாக இல்லாமல் பராமரிக்கப் படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல் 8-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4.2 கிலோ எடையை மிகக் கூடாது. பாடப்புத்தகச் சுமையினால் குழந்தைகளுக்கு தோள்பட்டை, முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படுவதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை செயலர் நந்த குமார் தனது உத்தரவில் கூறும்போது, “மாணவர்களின் உடல் எடைக்கு 10% தான் புத்தகப்பையின் எடை இருக்க வேண்டும். ஆனால் அடர்த்தியான நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் மற்றுன் தேவையற்ற பொருட்கள் ஆகியவற்றால் மாணவர்கள் தங்கள்உடல் எடையை விட 20 அல்லது 30% அதிக எடையைச் சுமக்கின்றனர்.

இது தீங்கு விளைவிக்கக் கூடியது. தண்டுவடம் மற்றும் மூட்டு வலி, மன அழுத்தம் மற்றும் களைப்பு ஆகியவை குழந்தையின் நலவாழ்வை பெரிதும் பாதிக்கிறது” என்றார்.

நம் நாட்டில் குறிப்பாக பள்ளிகள் மாணவர்களுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது, பள்ளி நேர புத்தகச் சுமையுடன் மாலையில் டியூஷன் படிப்புக்காகவும் கூடுதல் சுமையை சுமந்து வருகின்றனர்.

ஆனால் இந்த உத்தரவை மீறினால் தண்டனையோ அபராதமோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x